2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

சிறைத் தண்டனை ஐந்து வருடம்; சிறையில் 14 வருடங்கள்

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணையின் பின்னர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எட்டு தமிழ் அரசியல் கைதிகள், தீபாவளி தினமான ஒக்டோபர் 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். 

அவர்களில் மூவர், 1999ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது, தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோடு சம்பந்தப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். 

அவர்களை விடுதலை செய்வதற்கு முன்னர், சந்திரிகாவின் ஒப்புதலை நீதி அமைச்சு பெற்றிருந்தது. தாம் எவ்வித தயக்கமுமின்றி அந்த ஒப்புதலை வழங்கியதாக, சந்திரிகாவும் ஊடகங்களிடம் கூறியிருந்தார். 

இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த காலத்தில், அவரைக் கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டது. மைத்திரியே ஜனாதிபதியாக அந்த மன்னிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்தே, மேற்படி எண்மரை விடுதலை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் அதை விட முக்கியமான விடயம் ஒன்று இருந்ததை பலர் கவனித்ததாகத் தெரியவில்லை. 

அந்த எண்மரில் நால்வருக்கு, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை விட, கூடுதலான காலம் சிறையில் இருந்துவிட்டே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே அந்த விடயமாகும். 

அந்த அறிக்கையின் பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட ஒருவருக்கு 11 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் 14 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். 

மற்றொருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவரும் 14 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். மேலும், இருவருக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களும் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர். 

இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கிறது. நீதிமன்றத்தால் ஒருவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தை பார்க்கிலும் நீண்ட காலம் ஒருவரை சிறையில் வைத்திருக்க முடியுமா? ஆனால், இந்த அறிக்கையை வௌியிட்டிருப்பது ஜனாதிபதி செயலகம் என்பதே முக்கியமான விடயமாகும். 

அரசாங்கம் அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையிலான பொய்யான தகவல்களை ஜனாதிபதி செயலகம் வெளியிடுமா? அதுவும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிப்பதில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை குற்றஞ்சாட்டிக் கொண்டு இருக்கும் தருணத்தில்,  இவ்வாறான பொய்யான தகவலொன்றை ஜனாதிபதி செயலகம் வெளியிடுமா?

ஒருவர், ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், அவருக்கு எதிரான வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கும் வரை, சிலவேளை சிறையிலேயே அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். அதன் பின்னர், அவருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கலாம். அப்போது, அவருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தைப் பார்க்கிலும் அவர் மொத்தமாக சிறையில் இருக்க வேண்டி வரும். இது சாதாரண நடைமுறையாகும். 

இந்தச் சாதாரண நடைமுறைப்படியே மேற்படி நான்கு தமிழ்க் கைதிகளும் அவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தைப் பார்க்கிலும், நீண்ட காலம் சிறையில் இருந்திருந்தால் ஜனாதிபதி செயலகம், அதை ஏன் ஏதோ புதிய விடயம் போல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்?

இந்த விடயம் தொடர்பாக, தேசிய சமாதான பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நால்வரையும் தண்டனைக் காலத்தைப் பார்க்கிலும் நீண்டகாலம் சிறையில் வைத்திருந்தமை, அவர்களது மனித உரிமைகளை மீறிய செயலாகும் என்றும் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, விடுதலை செய்யப்பட்ட இந்தக் கைதிகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட காலத்துக்கு மேலதிகமாகத் தடுத்து வைத்தமைக்காக, அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது. அதாவது சமாதான பேரவையும், இந்தக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மேலதிக காலத்தை, விளக்கமறியல் காலமாக கருதவில்லை.

இந்த மேலதிக காலம், விளக்கமறியல் காலமாக இருந்தாலும், அதிலும் சிலருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையின்படி, இரண்டு கைதிகளுக்கு நீதிமன்றத்தால் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்கள் 14 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளனர். 

இந்த மேலதிக ஒன்பது வருட தடுப்புக் காலம், விளக்கமறியல் காலம் எனக் கருதினாலும், அது அந்தக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். தண்டனையே ஐந்து வருடம் என்றால், வழக்கு விசாரணைக்கு ஒன்பது  வருடங்களை எடுப்பது என்ன நியாயம்? 

இது இந்த நால்வருக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதி அல்ல. இதற்கு முன்னர், அதாவது கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவும் இந்த விடயத்தை எடுத்துக் காட்டினார். 35 கைதிகள் தமக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தை விட, நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும், 38 கைதிகளின் வழக்குகள் 20 வருடங்களுக்கு மேலாக மேல்நீதிமன்றங்களில் நீடித்துக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஒருவர் 20 வருடங்கள் சிறையில் இருந்தவாறே வழக்காடி, மேலும் பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தால், அது பாரிய மனித உரிமை மீறல் என்பதை எந்த நீதிபதியும் கருத்தில் கொண்டாரா என்பது சந்தேகமே. அவர் அதைக் கருத்தில் கொண்டாலும், அதற்காக அவரால் சட்டப்படி சிறைத் தண்டனையை குறைக்க முடியுமா என்பதும் சந்தேகமே. 

ஒருவர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டால், அந்தத் தடுப்புக் காலம் எவ்வளவு பாரிய கொடுமை? சில மாதங்களுக்கு முன்னர், ஒரு தமிழ் கைதி 12 வருடங்களுக்குப் பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். 

ஒருவர் நியாயமான முறையிலோ அல்லது நியாயமற்ற முறையிலோ சட்டப்படியோ சட்ட விரோதமாகவோ தடுத்து வைக்கப்பட்டால், அவரும் அவரது குடும்பமும் மானசீகமாக வெகுவாக பாதிக்கப்படுவது இயல்பாகும். நீண்ட காலமாக அவ்வாறு ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால், அவரது பொருளாதாரம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி, குடும்ப உறவுகள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும்; சீரழியும். 

அவர் சிறையில் இருந்து விடுதலையானதன் பின்னரே, சிலவேளை அவரால் இவற்றில் சிலவற்றையாவது சீரமைத்து, வாழ்க்கையை புதிதாக கட்டி எழுப்ப முடியும். எனவே, ஒருவர் நியாயமாக கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் உரிய காலத்தில் விடுதலை செய்யப்படாவிட்டால், அவர் தமது வாழ்க்கையையும் தமது குடும்பத்தினரது வாழ்க்கையையும் மீளக் கட்டி எழுப்பும் காலத்தையே அதிகாரிகள் அவரிடம் பறித்தெடுக்கிறார்கள். ஒருவரது ஆயுளில் இருந்து ஒரு நாளையேனும் இவ்வாறு நியாயமற்ற முறையில் பறித்தெடுக்க, தனி நபர்களுக்கோ அரசுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. 

ஒருவர் செய்யும் குற்றச் செயலொன்றுக்காக, மற்றொரு நபர் எடுக்கும் பதில் நடவடிக்கை பழிவாங்கலாக அமையலாம். ஆனால், ஓர் அரசின் சட்டத்தின் பிரகாரமான தண்டனை என்பது, சீர்திருத்த வழிமுறையாக அமைய வேண்டுமே தவிர, பழிவாங்கலாக அமைய முடியாது. 

கி.மு 1775க்கும் 1750க்கும் இடைப்பட்ட காலத்தில், பபிலோனியாவில் எழுதப்பட்டதாக கருதப்படும் உலகின் முதலாவது சட்டக் கோவையான ‘ஹம்முராபி’ சட்டக் கோவையின்படி, ஒருவர் மற்றொருவரது கண்ணை குருடாக்கினால், அந்த இரண்டாம் நபர், முதல் நபரின் கண்ணைக் குருடாக்க உரிமை பெறுகிறார். ஆனால், தற்கால நாகரிக உலகில், தண்டனை என்பது சீர்திருத்த வழிமுறையாகும். 

ஆனால், ஐந்து வருட சிறைத் தண்டனையைப் பெறுவதற்காக ஒருவர், 14 வருடங்கள் சிறையில் தவிக்க நேர்ந்தால் அல்லது, குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர், அதற்கு முன்னர் 12 வருடங்கள் சிறையில் இருக்க நேர்ந்தால், அது சீர்திருத்த நடவடிக்கையாக அமையுமா என்பது சந்தேகமே? 

நாமலின் மேற்படி உரையின் போது, அவர் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதைப் போல்தான் கருத்துத் தெரிவித்தார். இன்னமும் அவரது கட்சியே ஆட்சி பீடத்தில் இருக்கிறது. ஆனால் உருப்படியான எதுவும் நடைபெறவில்லை என்பது அவதானத்துக்கு உரியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X