2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

ராஜபக்‌ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

ராஜபக்‌ஷர்களின் பலமும் அவர்களின் குடும்பம்தான்; பலவீனமும் அவர்களின் குடும்பம்தான். ஒரு காலத்தில் அவர்களைப் பொறுத்தமட்டில் அதன் பலம், பலவீனத்தை விஞ்சி நின்றது.

ஆனால், காலம் செல்லச் செல்ல, குறிப்பாக 2012இன் பின்னர் பலவீனம், பலத்தை விஞ்சி நிற்கிறது என்று சொன்னால் அது பொய்யல்ல. ஆனால் ‘ராஜபக்‌ஷ’ என்ற பெயருக்கு, குறிப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது. 

2018இல், 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, ராஜபக்‌ஷர்களின், குறிப்பாக  மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் சிதைந்து போனாலும், அது ராஜபக்‌ஷ ஆதரவுத்தளத்தை முற்றாக தகர்த்துவிடவில்லை. வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள், 52-நாள் சதியிலிருந்து நாடு காப்பாற்றப்பட்டதைத்தான் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரானதும், தமக்கு எதிரானதுமான சதியாகப் பார்த்தார்கள். ஆனால், இந்த வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவு வாக்கு வங்கி, ஜனாதிபதித் தேர்தலுக்கு உதவாது. 

2009 யுத்த நிறைவுடன், ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதத்தின் ஒப்புயர்விலாத் தலைவனாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் நிலை, 2015இன் பின்னர் கூட தகரவில்லை. ஆனால், 2018இல் 52-நாள் அரசியலமைப்பு விரோத சதி, மஹிந்தவின் ஆதரவாளர் அல்லாத, ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளுக்கு இன்னொரு தலைமைக்கான அவசியத்தையும் வெற்றிடத்தையும் உணர்த்தியது.

ஆனால், அது ராஜபக்‌ஷ அல்லாத ஒருவராக இருந்தால், வெறித்தனமான ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் எனும் வாக்கு வங்கியின் ஆதரவு கிடைக்காது. அது ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத வாக்கு வங்கியை உடைப்பதாக அமையும். மேலும், ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியிலும், ஊசலாடும் வாக்குகள் நிறையவே உண்டு, அவற்றையும் கையப்படுத்தினால்தான் பெரியதொரு வெற்றியை அடையலாம் என்பது அவர்களின் சிந்தனையாக இருந்திருக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான், அந்த வெற்றிடத்தை நிரப்ப கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற அரசியல் முன்னனுபவம் அற்ற, ஹிட்லரைப் போன்ற பெரும் சர்வாதிகாரியென்ற பிம்பம் கட்டியெழுப்பப்பட்ட நபரை, இந்த மஹிந்த ராஜபக்‌ஷ அல்லாத குழுவும், ஊடக வணிக வியாபாரிகளும் ஆயுத வணிகர்களும், அவர்களின் ஆதரவில் இயங்கிய படித்துப்பட்டம் பெற்ற தொழில் நிபுணர்களான ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதிகளைக் கொண்ட ‘வியத்மக’ என்ற அமைப்பும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்த தலைமைப் பதவிக்கு முன்னிறுத்தத் தொடங்கின. 

52-நாள் அரசியலமைப்பு விரோத சதி தோற்கடிக்கப்பட்ட பின்னர், மஹிந்த மீண்டும் பழையபடி அமைதியாகினார். மஹிந்தவின் அமைதியை மேற்சொன்ன குழு, தமது நிகழ்ச்சிநிரலை முற்கொண்டு செல்லப் பயன்படுத்தியது.

 கோட்டாபயவை ஜனாதிபதியாக்க மஹிந்தமுனைந்தார் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, பெரும் களிப்பேதுமில்லாத முகத்துடன், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் வரை, கோட்டா பற்றியோ, கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக்குவது பற்றியோ மஹிந்த எதுவித முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.

மஹிந்தவிடம் வேறு திட்டங்கள் இருந்திருக்கலாம். மேற்சொன்ன குழுவின் அழுத்தத்தின்பேரில் கோட்டாவை ஜனாதிபதியாக்குவது என்பது, மஹிந்தவைப் பொறுத்தவரையில் குடும்பம், மற்றும் கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கை தானே குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். 
மேலும் கோட்டாவுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. தலைமைத்துவப் பண்பு சுத்தமாகக் கிடையாது. ஆனால், ‘நான்’ என்ற அகம்பாவமும் முட்டாள்தனமான முடிவை எடுத்தபின், அதன் பாதிப்புகளைப் பார்த்தபின் கூட, ‘நான்’ என்ற மமதையின் விளைவால் அதனை மாற்றிக்கொள்ளாத ஆபத்தான் குணமெல்லாம் கோட்டாவுக்கு இருக்கிறது என்பதை கோட்டா ஜனாதிபதியாகிய பின்னர்தான் மக்கள் தெரிந்துகொண்டார்கள். அது கோட்டாவின் அண்ணாவான மஹிந்தவிற்கு முதலே தெரிந்திருக்கலாம்.

அதனால் ஜனவரி முதல் ஏப்ரல் 2019 வரை மஹிந்த அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கழுவும் நீரில் நழுவும் மீனாகத்தான் இருந்தார். ஆனால்,‘வியத்கம’ குழுவினர், கோட்டாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னிறுத்தும் கைங்கரியத்தை ஊடகங்கள் வாயிலாகவும், கூட்டங்கள் மூலமும் நடத்திக்கொண்டுதான் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில்தான், இலங்கையர்கள் மட்டுமல்லாது முழு உலகமுமே அதிர்ந்துபோன உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கையை ஆட்டிப்போட்டன.

தென்இலங்கையர்களுக்கு இது யுத்த கால ஞாபங்களை ஏறத்தாழ 10 வருடங்களின் பின்னர் மீட்டுக்காட்டியது. இதனால் கதிகலங்கிப்போன சிங்கள-பௌத்த வாக்கு வங்கி, ‘ஹிட்லரை’ப் போன்ற ராஜபக்‌ஷதான் தமக்குச் சரியான தலைமையென்று எண்ணத் தொடங்கியது. அந்த எண்ணத்தை உடனடியாக அறுவடை செய்யும் வகையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு சந்தர்ப்பம் சார்ந்தது. மஹிந்தவுக்கு கோட்டா ஜனாதிபதியாவதில் முழு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அன்று இருந்த ஒரே பலமான வழி அதுதான். ஆகவே அந்த சமரசத்தை மஹிந்த, பசில், நாமல் என அனைத்து ராஜபக்‌ஷர்களும் ஏற்றிருக்கலாம். அந்த முடிவின் பிரதிபலன் இரண்டு வருடங்களில் கிடைத்தபோது, முதல் அடிகளை வாங்கியவர்களும் பசிலும் நாமலும் மஹிந்தவும்தான்.

ராஜபக்‌ஷர்கள் மீது கொலைகாரர்கள்; மக்கள் பணத்தை சுரண்டியவர்கள்; இன அழிப்பாளர்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் ராஜபக்‌ஷர“கள் செயல் வீரர்கள்; எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களுக்கு இருந்த ஒரே பலமான பதில் பேச்சு.

அதுவும் பொய்! ராஜபக்‌ஷர்கள் மிகப் பெரிய ‘ஃபெய்லியர்’ என்பதை தனது அடி முட்டாள்தனமான முடிவுகளாலும், மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்த நாடுவிட்டுத் தப்பித்து ஓடிய தனது நடவடிக்கையாலும் கோட்டாபய நிரூபித்துவிட்டார். இன்று ராஜபக்‌ஷர்கள் மீண்டும், கீழானதொரு நிலையில் நின்று கொண்டு அடுத்தது என்ன செய்வது என்று சதியாலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் பலம் ஒன்றுதான். அது இனவாதம். ‘சிங்கள-பௌத்த’ பேரினவாதம்தான் ராஜபக்‌ஷர்களின் அரசியல் மூலதனம். ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தௌிவு சிங்கள-பௌத்த வாக்கு வங்கியின் ஒரு சிறிதளவினருக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது.

மேலும், ராஜபக்‌ஷர்களால் வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பு முடியும் என்று பெரும்பான்மை வாக்கு வங்கி, இன்றைய பொழுதில் நம்பவில்லை. இதைவிடவும், ராஜபக்‌ஷர்களோடு கூட இருந்தவர்கள் பலரும், கவிழும் கப்பலாக ராஜபக்‌ஷர்களை கருதி, அதிலிருந்து பாய்ந்து, தனி வழிப் பயணத்தை தொடங்கிவிட்டார்கள்; இன்னும் பலரும் அந்த வழியில் தொடர்வார்கள் என்பது யதார்த்தம். 

ஆகவே, மீண்டும் தனித்த ராஜபக்‌ஷ ஆட்சியென்பது குறுங்காலத்தில் சாத்தியமில்லை என்பது ராஜபக்‌ஷர்ளுக்குத் தெரியும். ஆகவே ராஜபக்‌ஷர்கள் குறுங்காலத்தைவிட, நீண்டகாலத்தைப் பற்றி யோசிப்பதுதான் அவர்களுக்கு உசிதமானது.

ஆனால், இயற்கை மஹிந்தவுக்கும் சமலுக்கும் அவ்வளவு காலத்தை வழங்குமா என்பது முதல் கேள்வி. மஹிந்த உள்ளவரைதான் நாமலுக்கான இன்றைய இடம்; மஹிந்தவுக்குப் பிறகு, ராஜபக்‌ஷர்களே நாமலுக்கு இன்று அவர்கள் வழங்கியுள்ள இடத்தை வழங்குவார்களா என்பது கேள்விக்குறி.இதே நிலைதான் மஹிந்தவின் மற்றைய இரண்டு புதல்வர்களுக்கும்.

சசீந்திர ராஜபக்‌ஷ இதுவரை காலமும் அமைதியாக தன்னுடைய அரசியலை தனிவழியில் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒருவேளை காலம் அரசியலின் முன்னணிக்கு அழைத்து வரக்கூடும். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட, அரசியல் ஆசையோடும், கனவோடும் இருப்பது பசில்தான்.

ஆனால், பசிலின் ஜனாதிபதி கனவு என்பது சாத்தியமற்றது என்பது பசிலுக்குப் புரியவில்லை. கோட்டாவைக் கொண்டு வந்தே சூடுகண்ட மக்கள், பசிலை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள் என்பது யூகிக்கக் கூடியதே!

இந்த இடத்தில், கோட்டாவை மீண்டும் கொண்டு வர, அவரை முதலில் கொண்டு வந்த அதே கூட்டம் முயல்வதாகவும் செவிவழிச்செய்திகள் சொல்கின்றன. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் அரிதே.

ராஜபக்‌ஷர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்கு, ஒரு பதிலை உறுதியாகச் சொல்லலாம். அவர்கள்,  ‘மீண்டும் தாம் எப்படி அதிகாரத்துக்கு வருவது என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்’.

ஆனால், தற்போது ராஜபக்‌ஷர்கள் முன்னர் இருந்தளவுக்கு ஒற்றுமையாக இல்லை. அவர்களது பலம், அவர்களிடம் இல்லை. அதுவும் நல்லதுதான்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .