2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

தமிழ் மொழியின் இடத்துக்கு சீனமொழி எவ்வாறு வரமுடியும்?

Johnsan Bastiampillai   / 2021 மே 27 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்  

இலங்கையில், குறிப்பாக தென்னிலங்கையில் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில், தமிழ் மொழி புறக்கணிப்பைப் பற்றி, எவ்வளவோ செய்திகள், கட்டுரைகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், அண்மைக் காலமாக, தமிழுக்குப் பதிலாக சீனர்களின் மொழியான ‘மண்டரின் மொழி’, பாவிக்கப்படும் சில சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.  

சீன நிறுவனம் ஒன்று, தமிழ் மொழியைப் புறக்கணித்தால், அது அவர்களது விருப்பம் என்று கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், அண்மையில் இவ்வாறு தமிழ் மொழிக்குப் பதிலாக, மண்டரின் மொழியைப் பாவித்த நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் எனக் கூற முடியாது.   

சீன நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனங்களுக்குத் தமிழைப் புறக்கணித்து, பெயர் பலகைகளைக் காட்சிக்கு வைக்க, சட்டப் படி முடியுமா என்பது கேள்விக்குறியே!    

2019ஆம் ஆண்டே, முதல் முதலில், இது போன்றதொரு பெயர்ப் பலகையைப் பற்றி பேசப்பட்டது. கொழும்பு நகர திண்மக் கழிவுத் திட்டத்துக்கான பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம், மண்டரின் மொழிகளில் மட்டுமே, அத்திட்டத்தின் பெயர் குறிக்கப்பட்டு இருந்தது. “இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்ப்பலகை” எனக் கூறியிருந்த அப்போதைய தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அதற்காக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளைக் குறை கூறியிருந்தார்.  

இந்த விடயத்தைப் பற்றி, அவர் தமது ‘டுவிட்டர்’ கணக்கில் மேலும் கூறியிருந்ததாவது; ‘இலங்கையில், சீன நிறுவனங்களால் உள்ளூர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்திருக்க முடியாது. தேவையான உதவிகளை வழங்க விரும்புகிறோம். அத்தோடு, சீனத் தூதரகம் உள்ளிட்ட சகலரையும் இது விடயமாகச் சந்திக்க இருக்கிறோம். இலங்கையிலுள்ள சீனர்கள், உள்ளூர் சட்டங்களை மதிக்க வேண்டும். சீன நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் இரண்டு அரச கரும மொழிகளில் ஒன்றையோ இரண்டையுமோ, புறக்கணித்து மண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் பாவிக்கப்படுவதைப் பற்றிய முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கின்றன. வெளிநாட்டவர்கள் சட்டபூர்வமான உள்ளூர் மொழிகளை மதித்ததன் பின்னர் தான், எமது பெருந்தன்மை ஆரம்பிக்கின்றது’.   

2020ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், மற்றொரு சம்பவத்தைப் பற்றிய செய்திகள் வெளியாகி இருந்தன. அதாவது, கல்கிசை ரயில் நிலையத்தின் அறிவித்தல் பலகையில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம், மண்டரின் மொழிகளில் மட்டும், ரயில் நேர அட்டவணை எழுதப்பட்டு இருந்தது.   

இதுதொடர்பாக, ‘கலம்பொ கஸட்’ (Colombo Gazette) இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஒருவர், ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெரேராவிடம் வினவிய போது, அப்பதவிக்குத் தாம் நியமிக்கப்படுவதற்கு முன்னர், அந்த அறிவித்தல் பலகை போடப்பட்டு இருந்ததாகவும் அது தொடர்பாக விசாரணையொன்றை ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தார்.   

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அரச கரும மொழிகள் துணை ஆணையாளர் சிவப்பிரகாசம் மதிவாணன், “இலங்கையில் இயங்கும் சீன நிறுவனங்கள், மண்டரின் மொழியில் தமது பெயர்ப்பலகைகளைக் காட்சிக்கு வைக்கின்றன. அது, இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். பெயர்ப்பலகைகளில் இரண்டு அரச கரும மொழிகளே, முதலிடத்தைப் பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.   

சீன நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அறுவக்காலு கழிவுப் பரப்பு’இன் (landfill) பெயர் பலகையிலும், சீன மொழிக்கு முதலிடம் வழங்கியிருப்பதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மதிவாணன் தெரிவித்து இருந்தார்.  

இவ்வாண்டு மே மாத நடுப் பகுதியில், மற்றொரு சர்ச்சை எழுந்தது. அதன்படி, துறைமுக நகரப் பிரதேசத்தில் போடப்பட்டு இருந்த பெயர்ப்பலகை ஒன்றிலும் தமிழ் மொழி இல்லாமல் சிங்களம், ஆங்கிலம், மண்டரின் ஆகிய மொழிகள் மட்டும் பாவிக்கப்பட்டு இருந்தன.   

அந்தப் பெயர்ப்பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதைப் பற்றி, தமது ‘டுவிட்டர்’ கணக்கில் கருத்துத் தெரிவித்து இருந்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ‘தமிழ் எழுத்துகள் இல்லை; பரவாயில்லை! விரைவில் சிங்களமும் இல்லாமல் போய்விடும். இலங்கையர்கள் அப்போதாவது விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.   

பின்னர், அந்த விடயத்தைப் பற்றி, துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான, ‘கொழும்புத் துறைமுக நகர நிறுவனம்’ விளக்கமளித்து இருந்தது. இந்தநிறுவனம், ‘சைனா ஹாபர் என்ஜினியரிங் கம்பனி’ என்ற சீன நிறுவனத்தின் கீழான நிறுவனமாகும். இது, கடந்த டிசெம்பர் மாதம் சமூக வலைத்தளங்களில் உலாவிய தற்காலிகப் பெயர்ப்பலகை ஒன்றின் பழைய புகைப்படமாகும். அது அவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் முன்னரே, அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டு விட்டது’ என்று அந்த விளக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.   

இந்தப் பெயர்ப்பலகை, துறைமுக நகரத் திட்டத்தில் கடமையாற்றும் ஊழியர்களுக்காகவும் அனுமதிக்கப்பட்ட ஏனையோருக்குமானதொரு பெயர்ப்பலகை எனவும் அவ்வாறான பெயர் பலகைகளில் சகல அரசகரும மொழிகளும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் பெரும்பாலான ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் என்பதால் சிங்கள மொழியைப் பாவித்துள்ளதாகவும் கொழும்புத் துறைமுக நகர நிறுவனம், இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் மதிப்பதாகவும், மேலும் குறிப்பிட்டு இருந்தது.  

இது தற்காலிக பெயர்ப்பலகை என்பதால், அதில் தமிழ்ப் புறக்கணிப்பு நியாயமாவதில்லை. பெரும்பாலான ஊழியர்கள் உள்ளூர்வாசிகள் என்றால், அவர்களில் தமிழ் பேசுபவர்கள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 

அதேவேளை, அதில் பிழை இல்லாவிட்டால், அந்தப் பெயர் பலகை நீக்கப்படத் தேவையில்லை; ‘பிழை நடந்துவிட்டது’ என்று, பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே?  

இவற்றை விடப் பாரதூரமானதொரு சம்பவம், கடந்த வாரம் இடம்பெற்றது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ‘ஸ்மார்ட்’ நூலகத்தின் பெயர்ப்பலகை, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, சீனத் தூதுவர் ​ஆகியோரால் புதன்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. அதிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, சிங்களம், ஆங்கிலம், மண்டரின் ஆகிய மொழிகள் மட்டுமே இருந்தன.   

தமிழ் என்பது, இலங்கையின் இரண்டு அரச கரும மொழிகளில் ஒன்றாகும். சட்ட மா அதிபர், அரசின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராவார். அவரது திணைக்களத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப்பட்டமையை ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, முன்பக்கச் செய்தியொன்றின் மூலம் சுட்டிக்காட்டியதை அடுத்து, அப் பெயர்ப்பலகை உடனடியாக நீக்கப்பட்டது. இதனைச் சட்ட மா அதிபரின் தகவல் அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்து இருந்தார்.  

சட்ட மா அதிபர், சிலவேளை அந்தப் பெயர்ப்பலகையைத் திறந்து வைக்க வருவதற்கு முன்னர் கண்டிருக்க மாட்டார். ஏனெனில், அவருக்கு அதைவிட முக்கிய அலுவல்கள் இருக்கின்றன. ஆனால், அவரது திணைக்களத்தின் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் அதைக் காணவில்லையா?   

தொடர்ந்து, சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களிலும் சீன நிறுவனங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கான பொறுப்பை, யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை. குறிப்பிடப்பட்ட சகல இடங்களிலும், இரண்டு அரச கரும மொழிகளில் ஒன்றுக்கே அநீதி இழைக்கப்படுகிறது.   

ஆனால், இது போன்ற சர்ச்சைகள் எழும் போதெல்லாம், சீன அதிகாரிகளே பதிலளிக்கிறார்கள். இலங்கை அதிகாரிகளுக்கு, நாட்டில் அரச கரும மொழிப் பாவனையில் ஏற்படும் குறைகளை நீக்கும் பொறுப்பு, இல்லையா என்ற கேள்வி அதனால் எழுகிறது.  

மொழிப் பாவனை மூலம், ஒரு சமூகத்தின் தன்மானத்தைச் சீண்டிப் பாரப்பது அநாகரிக செயலாகும். அதேவேளை, 30 ஆண்டுகளாக, இலங்கையில் பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிரைக் குடித்த போருக்கான காரணங்களில் ஒன்று, மொழிப் பிரச்சினையே என்பதைக் குறிப்பாக சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகள் உணர வேண்டும்.   

அதேவேளை, நாட்டில் அநாவசியமான பிரச்சினைகள் இது போன்ற சம்பவங்களால் உருவாகக்கூடும் என்பதை, சீன அதிகதாரிகள் உணராமையும் கேள்விக்குறியே. அவர்கள் இலங்கைத் தமிழர்களை, இந்தியர்கள் எனக் கருதிச் செயற்படுகிறார்களா எனவும் சிலர் கேள்வி எழுப்பலாம்.   

ஏனெனில், இலங்கை தமிழர்கள், இந்தியாவுக்கு நெருக்கமானவர்கள். அதேவேளை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே, நல்லுறவு இல்லை என்பதும் சகலரும் அறிந்த விடயமாகும்.  

சீனா, இலங்கையின் நீண்ட கால நண்பன். சர்வதேச அரங்கிலும் சீனா, இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாகவே முடிவுகளை எடுக்கிறது. இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் உள்ளூரில் அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில், அந்நாடு செயற்படும் எனக் கூற முடியாது.   ஆயினும், தொடர்ந்து பல சம்பவங்கள் இவ்வாறு நடைபெறுவதைப் பலர் பல விதமாக உணரலாம். இலங்கையில் பாரிய பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயலும் சீன அதிகாரிகள், அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .