2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்-திகாம்பரம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டத் தோட்டத் தொழிலாளர் சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான விமர்சனங்கள் குறித்து நான் அலட்டிக்கொள்வதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டம் நானுஓயா பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,

"எனக்கு வாக்களித்த மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதற்காகவே நான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளளேன். நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறித்து எனக்கு வாக்களிக்காதவர்களே பெரிதும் கவலைப்படுகின்றனர்.

எனது இந்தத் தீர்க்கமான முடிவு குறித்து எனக்கு வாக்களித்த மக்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் தேவைப்பாடுகள் குறித்தும் எனக்கு நன்கு தெரியும்.

இவற்றினை நிறைவேற்றும் வகையில் நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்திற்கு பிறகு மலையகத்தில் அபிவிருத்தி குறித்து கூடிய கவனம் செலுத்த உள்ளதாக எனக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், தோட்டப்பகுதி மைதானங்கள் மற்றும் பாதைகளைச் செப்பனிடுவதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளேன். இந்நிலையில், நாம் எதிர்த்தரப்பில் இருந்து போது எமது ஆதரவாளர்களுக்குப் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தற்போது இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எமது அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .