2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்காக 7 பதக்கங்களைப் பெற்ற வடக்கு வீரர்கள்

க. அகரன்   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வட மாகாண காலுதைச்சண்டை வீரர்கள் எழுவர் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வட மாகாண காலுதைச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வட மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சஞ்சயன் (18) தங்கப் பதக்கத்தையும், பி. ராகுல் (17) தங்கப் பதக்கத்தையும், ரி. நாகராஜா (18) வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ. கெவின் (11) தங்கப் பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ. நிரோஜன் (16) தங்கப் பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வட மாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த 14 வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும் எட்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை மாலை நான்கு மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .