2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

செல்சிக்கு அதிரடி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 25 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், மக்காபி டெல் அவிவ் கால்பந்தாட்டக் கழகத்துக்கெதிரான போட்டியில், செல்சி அணிக்கு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

அண்மைக்காலமாக அழுத்தத்துக்குள்ளாகியிருந்த செல்சி அணி, ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, போட்டியின் 20ஆவது நிமிடத்தில், செல்சி அணியின் கரி சஹில், கோலொன்றைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதன் பின்னர், போட்டியின் 40ஆவது நிமிடத்தில்  மக்காபி டெல் அவிவ் அணியின் டல் பென் ஹய்ம், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால், 10 பேர் கொண்ட அணியாக மாறியது. எனினும், முதலாவது பாதியில் மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், 1-0 என்ற கணக்கில் அப்பாதி முடிவடைந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியில், 73ஆவது நிமிடத்தில், செல்சியின் வில்லியன் பெற்ற கோலின் உதவியுடன் 2-0 என்ற முன்னிலையைப் பெற்ற அவ்வணி, 3 நிமிடங்களில்  ஒஸ்கார் பெற்ற கோலினால், 3-0 என்ற நிலையைப் பெற்றது. தொடர்ந்து, இறுதி நிமிடத்தில், கேர்ட் ஸெளமா பெற்ற கோலினால், அவ்வணிக்கு, 4-0 என்ற கோல் கணக்கிலான வெற்றி கிடைத்தது.

இப்போட்டியின் 72ஆவது நிமிடத்தில், செல்சி அணியின் ஜோன் டெரி, காயம் காரணமாக வெளியேற வேண்டியேற்பட்டது. அந்தக் காயத்துக்கு, மைதானத்தைக் குறைகூறிய பயிற்றுநர் மொரின்ஹோ, அது ஆபத்தானதாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார். அத்தோடு, அடுத்த போட்டியில் அவர் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மொரின்ஹோ குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய போட்டியில், செல்சி அணியின் பயிற்றுநர் ஜொஸ் மொரின்ஹோவுக்கும் அவ்வணியின் வீரர் டியாகோ கொஸ்டாவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

போட்டியில், கொஸ்டாவின் இயக்கம் தொடர்பாக அதிருப்தியடைந்த மொரின்ஹோ, கொஸ்டாவை நோக்கி கோபமான எதிர்வினைகளை வெளிப்படுத்த, கொஸ்டாவும் அதற்குப் பதிலளித்திருந்தார்.

எனினும், போட்டியின் முதற்பாதி முடிவில், அணி அறையில் 'சில முத்தங்களும் கட்டியணைப்புகளும் காணப்பட்டன" எனத் தெரிவித்த மொரின்ஹோ, இருவருக்குமிடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லையெனத் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஏனைய சம்பியன்ஸ் லீக் போட்டிகளில், டினாமோ ஸக்ரெப் அணியை ஆர்சனல் அணி 3-0 என்ற கணக்கிலும், றோமா அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி, 6-1 என்ற கணக்கிலும் வெற்றிபெற்றுக் கொண்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .