2022 ஜூலை 04, திங்கட்கிழமை

காட்டுப்பன்றி கறியின் இருண்ட யதார்த்தம்

Editorial   / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனிஷ்கா சால்பிடிகோரல (மொழிபெயர்ப்பு: கிருத்திகா துரைராஜா)

இந்து சமுத்திரத்தின் முத்தாக வர்ணிக்கப்படும் இலங்கையானது, வனவிலங்குகள் நிறைந்த பசுமையான மழைக்காடுகள், பரந்த மலைத் தொடர்கள் முதல் செழிப்பான ஈரநிலங்கள் மற்றும் வளமான கடல் வாழ்விடங்கள் வரை, மிக அழகான இயற்கை நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

தற்போது ஆசியாவிலேயே அதிக உயிரியற் பல்வகைமை அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக காட்சியளிக்கும் இலங்கை, 36 உலகளாவிய உயிரியற் பல்வகைமை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இலங்கையின் உயிரியற்; பல்வகைமை ஒத்துழைப்பு இல்லத்தின் பொறிமுறையின் படி நாட்டின் (Biodiversity Clearing House Mechanism of Sri Lanka) 26.5 சதவீதமான (கடலோர மற்றும் கடற் பகுதிகள் உட்பட) பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கைத் தீவின்; காடுகள் பலவிதமான அயல்நாட்டு உயிரினங்களின் தாயகமாகக் காணப்படுகின்றது.

இருப்பினும், பல வனவிலங்குகள் செறிந்த நாடுகளைப் போலவே, இந்தத் தீவானது விலங்குகளைத் திருடுதல், வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ஆகியவற்றிற்குப் புதியதல்ல. வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுதல் சுற்றுச்சூழலின் சமநிலையை பாதித்துள்ளதுடன், மிருகச் சித்திரவதை, மனிதாபிமானமற்ற பிடிக்கின்ற முறைகள், மற்றும் அதிக அதிர்வலைகளைக் கொண்ட வேலிகளில் அல்லது வலைகளில் வனவிலங்குள் எதிர்பாராத விதமாக சிக்குதல் போன்றன பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் இலங்கை சிறுத்தை (Panthera pardus kotiya) மற்றும் இலங்கை யானை (Elephas maximus maximus) போன்ற பலம்பொருந்திய வலிமை மிக்க வனவிலங்குகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்மீட் என்றால் என்ன?

“புதரில்" சிக்கிப் பிடிபடும் வனவிலங்குகளின் இறைச்சியைக் குறிக்க ஆப்பிரிக்காவில் முற்காலத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒரு சொல், இப்போது எந்த வனவிலங்குகளின் இறைச்சியையும் குறிக்க உலகில் சகல பாகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது, வனவிலங்குகளை பிற தேவைகளுக்காக பிடித்து வளர்ப்பது சட்டவிரோதமான நடைமுறையாகும். இத்தகைய குற்றங்கள் 1937இன் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (FFPO) கீழ் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

வேட்டையாடுபவர்கள் மான் மற்றும் காட்டுப்பன்றிகளை அவற்றின் இறைச்சி மற்றும் தோல்களுக்காகவும், ஆமைகள் மற்றும் ஆமைகள் போன்ற ஊர்வனங்களை அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளுக்காகவும் இலக்கு வைக்கின்றனர். மேலதிகமாக, தந்தம், பாதங்கள் அல்லது எறும்பு மான் என்றழைக்கப்படும் பாங்கோலின் செதில்கள் போன்ற விலங்குகளின் பிற உறுப்பு அல்லது பாகங்களும் இலக்காகின்றன.


வனவிலங்குகள் செறிந்து காணப்படும் பகுதிகளில் பெரும்பாலும் வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுதல் மற்றும் அதைத் தொடர்ந்து அவற்றை உணவுக்காக பயன்படுத்தல் ஆகியவை இலங்கையில் உள்ள வனப் பாதுகாவலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தையும் மற்றும் அக்கறையையும் ஈர்த்துள்ளன. இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் வர்த்தகமானது, பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத இறைச்சிகளுக்குக் காணப்படும் அதிக கேள்வியின் அடிப்படையில் இயக்கப்படுவதுடன், இவை நிலைபேறற்ற சூழலியல் பேரழிவுகளை விளைவிக்கும்.

இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு

FFPO என்பது இலங்கையில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முதன்மையான சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் 'முற்றிலும் பாதுகாக்கப்பட்ட" எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடுவது அல்லது இறைச்சிக்காக பிடிப்பது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கட்டளைச் சட்டமானது கண்ணிப் பொறிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை தடை செய்வதுடன், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவித்தல், வேட்டையாடப்படும் வனவிலங்கு இறைச்சி வர்த்தகம் மற்றும் விற்பனை போன்ற தடைசெய்யப்பட்ட செயல்களை தெளிவாக கோடிட்டு விளக்குதல்;, மேலும் பலவித வன இனங்களுக்கான வகைப்படுத்தல்களையும் இச்சட்டம் வழங்குகின்றது.

இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் இருந்தாலும் கூட, பயிற்சித்திறன் மற்றும் மனிதவள பற்றாக்குறை வனவிலங்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் எப்போதும் காணப்படும் ஒரு பிரச்சினையாக விளங்குகின்றது. தீவு முழுவதும் காணப்படும் கடத்தல் மற்றும் வேட்டையாடுதலை ஒழிக்கக் தேவையான வளங்கள் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக பரந்து விரிந்த வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளில் போதியளவு ரோந்துப் பணியில் ஈடுபட முடியாத ஒரு நிலமை காணப்படுகின்றது.

மக்கள் ஏன் வனிவிலங்குகளின் இறைச்சியினை உட்கொள்கின்றார்கள்? மற்றும் அதனை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள்?

வனவிலங்குகளின் இறைச்சியிற்கான கேள்வியினை விளக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நுகர்வு — காட்டுப்பன்றி மற்றும் மான் இறைச்சியானது உங்கள் உள்ளுர் மளிகைக் கடையில் கிடைக்கும் வழக்கமான இறைச்சி வகை அல்ல. இருப்பினும், தங்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளில் வேட்டையை சாதாரண விடயமாகக் கருதும் கிராமப்புறங்களில் மற்றும் விவசாய சமூகங்களில், இவ் விலங்குகளின் இறைச்சி புரதத்தின் தேவையை நாடி உட்கொள்ளப்படுகிறது. இருப்பினும், புழக்கத்தில் இல்லாத மாமிச வகைகளை தேடி அலையும்  மற்றொரு வகை நுகர்வோர் காணப்படுகின்றனர். நாம் எதைக் காண்கிறோமோ அதனை அடைந்து கொள்ள ஆவலுடன் எத்தணிப்பது மனிதனின் இயல்பு நிலையாகும். புழக்கதிதில் இல்லாத ஒன்றை உட்கொள்வதற்கான உந்துதல் பிரத்தியேகமாகத் திகழ வேண்டும் என்ற தேவயை அடிப்படையாகக் கொண்டதுடன் இந்நிலைமை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய கேள்வியை உருவாக்குகிறது, இது எங்கள் அடுத்த வகைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இலாபம். 'தனிச்சிறப்புரியவை" என்று கருதப்படும் வனவிலங்குகளின் இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்கள் (தந்தைகள், சிறுத்தை பாதங்கள், தோல்கள்) சட்டவிரோத வர்த்தக வட்டாரங்களில் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது மற்றும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஈர்ப்பானது பெரும்பாலும் வேட்டையாடுபவர்களின் தார்மீக வலிமையை விட அதிகமாகக் காணப்படுகின்றது. வர்த்தக நோக்கத்தைக் கொண்டு வேட்டையாடுதல் இலங்கையில் குறைவாகவே காணப்பட்டாலும், அது புறக்கணிக்கப்படக் முடியாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் (அற்பமான விடயமாக கருதப்படாவிட்டாலும்), இலாபம் மற்றும் வர்த்தகத்திற்காக வனவிலங்குகளை சுரண்டுவது, காயப்படுத்துவது மற்றும் அகற்றுவது போன்ற செயல்கள், இயற்கை மற்றும் இயற்கை ஒழுங்கின் மீதான தொடர்பின்மை மற்றும் அவமரியாதையின் ஆழமான மனோநிலையை காட்டுகின்றது. கேள்வி அதிகரிக்கும் போது, வேட்டையாடல் செயற்பாட்டின் பரவல் அதிகரிக்கும் நிலையானது ஒரு சாதாரண விலங்கினை கொலை செய்வதனதால் ஏற்படும் விளைவை விட பெரிதும் அப்பாற்பட்டவை. உலகளாவிய அடிப்படையில், வேட்டையாடுதலின் வளர்ச்சி மற்றும் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வனவிலங்குகளின் இறைச்சியினை நுகர்தல் போன்ற செயற்பாடுகள் பல உயிரினங்களின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதுடன் இதன் விளைவாக பல விலங்கினங்கள் பெரிதும் அபாயத்;துக்கு உள்ளாகி அழிந்து போகக்கூடிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளன.

இறைச்சிற்காக வனவிலங்குகள் எவ்வாறு பிடிக்கப்படுகின்றன?

இலங்கையில் இறைச்சிற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் முறைகளில் சுடுதல், கண்ணிப்பொறி வைத்தல், மற்றும் தாடை வெடிப்பான்களை இடுதல் ஆகியவை அடங்கும். சுடுவது மிகவும் சிக்கலற்ற ஒரு முறை என்றாலும், திட்டமிடப்படாத பிடிப்புகள் என்று வரும் போது கண்ணிப்பொறிகள் மற்றும் தாடை வெடிப்பான்கள் மனிதாபிமானமற்ற, ஆபத்தான மற்றும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் முறைகள் ஆகும்.

கண்ணிப்பொறி

ஒரு கண்ணிப்பொறி என்பது அடிப்படையில் விலங்குகளின் நடை பாதைகளில் மறைக்கப்பட்ட வண்ணம் அமைக்கப்படும் உருக்குக் கம்பிகளால் செய்யப்பட்ட ஒரு கயிறு. விலங்கானது கம்பிகளைத் தொடும் போது கயிறு சுருண்டு கண்ணிப் பொறியானது இயக்கப்படுகின்றது. இது பின்னர் விலங்கின் கழுத்து, மூட்டு அல்லது உடற்பகுதியைச் சுற்றிப் பிடிப்பதுடன் விலங்கு தன்னை விடுவித்துக் கொள்ள போராடும்போது கயிறு இறுக்கமடைகிறது, இதன் விளைவாக விலங்கானது பயங்கரமான காயங்களுக்கு உட்படுவதுன்; பெரும்பாலான சந்தர்ப்பங்களில் படிப்படியாக வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது.

தாடை வெடிப்பான்கள் "ஹக்கபட்டாஸ்"

தாடை வெடிப்பான்கள் வனவிலங்குளை இறைச்சிற்காக வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் எளிதில் நம்பமுடியாத அளவிற்கு வழக்கத்தில் உள்ள மற்றும் வெறுக்கத்தக்க மற்றுமொரு முறையாகும். பொதுவாக காட்டுப்பன்றி மற்றும் மான் போன்ற வனவிலங்குகளை விரைவில் கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை குறிவைக்கப் பயன்படுகிறது.

துப்பாக்கிப் பொடி மற்றும் ஃ அல்லது சத்தம் விளைவிக்கும் பாப்-பாப் பட்டாசுகளின் கலவையுடன் சிறுகற்கள் மற்றும் உலோகத் துண்டுகளைச் சேர்த்து தயாரிக்கப்படும் இவ் வெடிப்பான் பின்னர் புல் அல்லது கருவாட்டுடன் சேர்த்து இருகக் கட்டப்படுகின்றது. இந்த தற்காலிக வெடிபொருள் பின்னர் விலங்குகள் அடிக்கடி செல்லும் நடை பாதைகளில் விடப்படுகிறது. இந்த தன்னிச்சையாக இயங்கும் சாதனங்கள் கடிக்கும் போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வேட்டை இறைச்சி வியாபாரத்தின் தாக்கங்கள்

பைகட்ச் - எதிர்பாராத வகையில் பிடிபடல்

பிடிப்பு முறைகளின் எதிர்மறையான விளைவுகள், இலங்கையின் வலிமை மிக்க வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இனங்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் வேட்டை இறைச்சி வர்த்தகத்திற்கு இடையே உள்ள நேரடி தொடர்பை எடுத்துக்காட்டுகின்றது.

சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை போன்ற பிரச்சினைகள் கண்ணிப் பொறிகள் மற்றும் தாடை வெடிப்பான்களையும் பயன்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ளுவது போன்றே எதிர்பாராத முறையில் விலங்குகளை பிடிக்கும் 'பைகட்ச்" முறைகளிலும் காணப்படுகின்றது. கண்மூடித்தனமான முறையில் வைக்கப்படும் கண்ணிப்பொறிகள் மூலம் இலக்கு வைக்கப்படும் போது காட்டுப்பன்றி போன்றே சிறுத்தை போன்ற பிற விலங்குகளும் வேறுபாடுகள் இன்றி இயல்பாகவே சிக்கிக் கொள்ளலாம்.

கண்ணிப் பொறிகளைப் பொறுத்தவரை, சிறுத்தை போன்ற பல விலங்குகள் பெரும்பாலும் தங்கள் உடல்களை கண்ணிப் பொறிகளில் சிக்க வைக்கின்றன மற்றும் யானைகள் போன்ற பெரிய விலங்குகள் அவற்றின் தும்பிக்கை அல்லது கால்களை வலையில் சிக்கவைக்கின்றன. சிறுத்தைகளைப் பொறுத்த வரையில், பொறிகள் பொதுவாக இடுப்பைச் சுற்றிப் பிடிப்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளுக்கு கடுமையான மற்றும் பெரும்பாலும் குணப்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுகின்றது.

வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நம்பகத்தின் தரவுகளின்படி, கண்ணிப் பொறிகளில் சிக்கும் 90 சதவீதமாக சிறுத்தைகள் இறக்கின்றன. இலங்கையில், 2010 ஆம் ஆண்டு முதல் கண்ணிப் பொறிகளில் சிக்கிய 47 சிறுத்தைகளில், 42 இறந்துவிட்டன. இந்த நிலைமை,  கண்ணிப் பொறிகளை இலங்கையின் சிறுத்தைகளின் மரணத்திற்கான ஒரு முன்னணிக் காரணமாகக் காட்டுகின்றது.

யானை போன்ற பெரிய விலங்குகளால் கண்ணிப் பொறிகளை உடைத்து வெளிவர முடிந்தாலும், அவற்றின் மூட்டுகளில் இறுக்கப்பட்ட கம்பிகள், வடுவை ஏற்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இது இறுதியில் தேவையான உணவைத் தேடிப் பெற்றுக் கொள்ளும் திறனை பாதிக்கின்றது

கண்ணிப் பொறிகளைப் போலவே தாடை வெடிப்பான்களும் வேட்டையாடுபவர்கள் அவர்களது பிரசன்னமின்றி அங்கே வனவிலங்குகளைப் பிடிக்க ஒத்தாசையாக இருக்கின்றது. சிறிய விலங்குகள் வெடிப்பினால் உடனடியாக இறக்கும் அதே வேளையில், இலங்கையில் யானை போன்ற பெரிய விலங்குகள் பெரும்பாலும் உடனே இறந்துவிடுவதில்லை. மாறாக, இந்த வெடிக்கும் சாதனம் அவர்களின் தாடையை உடைத்து, வாயில் வெடி மருந்துத் துண்டுகளை செலுத்துவதால் ஏற்படும் வலி மற்றும் உயிர்ச் சக்தியை குறைக்கும் சேதங்கள் போன்றன வாயினுள்; ஏற்படுவதனால் அவை கடுமையான காயங்களுக்கு உள்ளாவதுடன் நோய்த்தொற்று மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு பல நாட்கள் வலியை அனுபவித்ததன் பின்னர் மரணத்தை சந்திக்கின்றனர்.

இலங்கையின் வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளின்  பல பிரதேசங்களில் அதிக யானைகள் நடமாட்டம் இருப்பதால் இவ்வாறான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 2008 இல் பதிவு செய்யப்பட்ட முதல் மரணத்திலிருந்து இப்போது வரை, தாடை வெடிப்பான்கள் இலங்கை யானையின் முக்கிய கொலை காரணியாக மாறியுள்ளன. ‘Mongabay’ என்ற வனப்பாதுகாப்பு செய்தித் தளத்தின் அறிவிப்பின் படி 2020 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 323 மொத்த யானை இறப்புகளில் 54 இறப்புகள் தாடை வெடிப்பான்கள் காரணமாக ஏற்பட்டவை.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் (DWC) கருத்துப்படி, இந்த வகையான வேட்டையாடும் நடைமுறை காரணமாக பெரும்பாலான அறிக்கைகளில் சிறுத்தைகள் மற்றும் யானைகளைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவை மட்டும் பலியாகவில்லை. மீதமுள்ள, இலங்கையின் மூன்று சிறிய காட்டுப் பூனைகளைகள் கூட இதனால் பலியாகியிருப்பதை அறிக்கைகளில் உள்ளடக்கியிருப்பதைக் காண முடியவில்லை.

விலங்குகளுக்கான மீட்புப் பணி மற்றும் சிகிச்சையானது பெரிதும் தாமதிக்கப்பட்டு பல மணி நேரங்களுக்குப் பிறகு நடைபெறுகிறதென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. யாராவது இவ்வாறான சம்பவங்கள் பற்றி புகாரளித்தால் மட்டுமே உதவிச்சேவைகள் அனுப்பப்படுகின்றன, இது சிக்கித் தவிக்கும் விலங்குகளுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் ஒரே ஒரு உதவியாக இருக்கலாம் அல்லது அது அவ்வாறு தான் இருக்கின்றது.

எதிர்பாராத முறையில் விலங்குகளை பிடிக்கும் 'பைகட்ச்" முறையானது ஒரு இனத்தின் எண்ணிக்கையில் தீவிர வீழ்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் ஃ அல்லது மற்றொரு இனத்தின் எண்ணிக்கையில் அதிகரிப்பினை ஏற்படுத்தலாம் அல்லது மற்ற விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம் வாழும் பலம்வாய்ந்த விலங்குகளை இல்லாதொழிக்கலாம். இந்நிலைமையானது உணவுச் சங்கிலிகளை நேரடியாகப் பாதிப்பதுடன் சுற்றுச்சூழலியல் அமைப்பில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றது. இது நோய்களால் பீடிக்கப்படும் நிலையை உருவாக்கி அல்லது திடீரென்று உணவு மற்றும் பிற வளங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்;தி ஒரு செழிப்பான சுற்றுச்சூழலியல் அமைப்பு செயற்;படுவதை நிறுத்தலாம்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகள் நமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கினாலும், குறிப்பாக வேட்டையாடப்படும் வனவிலங்குகளின் இறைச்சியை நுகர்தல் மற்றும் அதனை வர்த்தகம் செய்வதன் காரணமாக பல குறைபாடுகளும் ஏற்படுகின்றன. வனவிலங்கு வர்த்தகம் விலங்குகளின் எண்ணிக்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, மனிதர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களுக்கும் ஃ கிருமித் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

ஜூனோஸ்கள் என்ற தாவுநோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் மற்றும் வைரஸ்கள், பற்றீரியா ஒட்டுண்ணிகள் மற்றும் பூஞ்சை போன்ற தீங்கு விளைவிக்கும் கிருமிகளால் ஏற்படுகின்றன. நோய்கள் ஒப்பீட்டளவில் குறைந்த தாக்கத்திலிருந்து உயிர் ஆபத்தை விளைவிக்கும் அளவு வரையிலும் காணப்படலாம். இந்த கிருமிகள் விலங்குகளிலிருந்தே தோன்றலாம், விலங்குகளை தங்களது அடைக்கலமாக வைத்துக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் அல்லது விலங்குகளின் இறைச்சியை சுகாதாரமற்ற முறையில் சேமித்து தயாரிக்கும் போது கூட ஒட்டுண்ணிகள் நுழையலாம்.

அண்மையில் ஏற்பட்ட கொவிட் - 19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் சுகாதாரத் துறையின் வீழ்ச்சி ஆகியவை உலக அரங்கில் விலங்குகள் மூலம் மனிதர்களிடையே பரவும் நோய்க் கிருமிகளின் அச்சுறுத்தலுக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாகும். எவ்வாறாயினும், கொவிட் - 19 மட்டுமே நாம் எடுத்துக் காட்டக்கூடிய உதாரணம் அல்ல. SARS, HIV மற்றும் எபோலா போன்றவற்றுடன், 60 சதவீதமான தொற்று நோய்கள் விலங்குகளில் இருந்தே உருவாகின்றன.

வேட்டையாடுதல் மற்றும் அதனை சார்ந்த வர்த்தகம் பற்றிய அதிக விழிப்புணர்வு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத சந்தர்ப்பத்தில், இந்த சுழற்சியை மீண்டும் நாங்கள் எதிர்நோக்குவோம். எவ்வாறு இருப்பினும், மற்றொரு அழிவுகரமான தொற்றுநோயிலிருந்து உலகம் தப்பித்துக் கொள்வது கடினமாக இருக்கும் என்பது இப்போது தெளிவாகிறது.

மக்களின் தாக்கம்

தொற்றுநோய்களின் போது நாங்கள் அனுபவித்த உலகளாவிய கட்டுப்பாடுகள் மற்றும் அடைப்புகள் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தியதுடன் எங்கள் வனவிலங்கு பூங்காக்கள் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய நிலைமை ஏற்பட்டது. இதன் மூலமாக ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான மீளுருவாக்கங்கள் பணத்திற்காகவும் மற்றும் வாழ்வாதாரத்திற்காகவும் இறைச்சிற்காக வனவிலங்குகளை வேட்டையாடுவர்களை சீர்திருத்தப் பாதைக்கு கொண்டு வந்து அவர்களை தங்கள் முந்தைய தொழில்களுக்குத் திரும்பியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதிகரித்த நகரமயமாக்கல், இயற்கை வாழ்விடங்களின் முழுமையான அழிவுக்கு உள்ளாக்கியுள்ளதுடன் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சிற்கான கேள்வியை அதிகரித்து பல சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், இந்தக் கேள்வினை பூர்த்தி செய்யும் வகையில், வேட்டையாடுதல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது. காலப்போக்கில் இது போன்ற செயல்கள், பல பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையில் மெதுவான மற்றும் நிலையான வீழ்ச்சியை நேரடியாக ஏற்படுத்துவதுடன் இது இலங்கையின் உயிரியற் பல்வகைமையின் பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

வேட்டையாடப்படும் வனவிலங்குளின் இறைச்சி வர்த்தகத்தின் சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கு, இதற்கான கேள்வியைக் குறைப்பது போதுமானதாக அமையாது. இது சம்பந்தமான விழிப்புணர்வு மிக முக்கியமானதாக இருந்தாலும் வேட்டை இறைச்சி வர்த்தகம் ஏன் தொடர்கிறது என்ற பிரச்சினையை அது மாத்திரம் தீர்க்க முடியாது. சுற்றுலாத் துறையின் மூலம்  கிடைத்த வருமானம் இல்லாமல் போகும் நிலையில் அதில் தங்கியிருந்த ஆதவரற்ற மற்றும் மிகவும் விரக்தியடைந்த மக்கள், வேட்டையாடுதல் போன்ற முந்தைய வருமான வழிகளை நாடுகின்றனர். இது இவ்வாறான சூழ்நிலைகளின் போது காணப்பட வேண்டிய பொருளாதார பல்வகைப்படுத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பிரதேச மக்களை பிற வருமான வழிகளைப் பெறுவதற்கு வலுவூட்டுவது இவ்வர்த்தகத்தைக் கணிசமான அளவு குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

FFPO இனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பயிற்சி, கண்காணிப்பு வழிமுறைகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் அதிக பரிந்துரைகள் தேவைப்படும் அதேநேரம் வேட்டையாடப்படும் வனவிலங்கு இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடும் வழங்குனர்கள் மற்றும் நுகர்வோர் இரு சாரார்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு பல்நோக்கு அணுகுமுறையின் தேவைப்பாட்டினை மேலே குறிப்பிட்டுள்ள விடயங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

 இலங்கையின் சுற்றுச்சூழலியல் கட்டமைப்பு கூருணர்வுடையது மற்றும் சமநிலையில் தங்கியுள்ளது. உரையாடலில் ஈடுபடுவதன் மூலமும், நமது நுகர்வுப் பழக்கங்களை மறுபரிசீலனை செய்வதன் மூலமும் இந்த ஏற்றத்தாழ்வைத் தடுக்க உதவலாம்.

வேட்டையாடப்பட்ட வனவிலங்கு இறைச்சி வியாபாரத்தால் இயற்கைக்கும் நமது வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதற்கான நுகர்வு குறைவதற்கான ஒரு முக்கிய படியாகும். மனிதர்களின் செயல்கள் அவர்களைச் சுற்றியுள்ள சூழலை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்களைக் கொண்ட கலந்தாலோசனைகள், நமது பாதுகாக்கப்பட்ட உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்காத மிகவும் நிலைபேறான, நெறிமுறைத் தேர்வுகளை நோக்கி நுகர்வோரை வழிநடத்த உதவும்.

சுற்றுச்சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பது மற்றும் அரிய, அழிந்துவரும், உள்;ர் உயிரினங்களைப் பாதுகாப்பது நமது அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மனித நடவடிக்கைகளால் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கும்; வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நமது தேர்வுகள் பிரதிபலிக்க வேண்டும்.

இந்த பிரச்சினையில் பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Small Cat Advocacy and Research, Leopocon Sri Lanka மற்றும் The Parrotfish Collective, ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளின் மூலம் மற்றும் The Lanka Environment Fund இன் இன் ஆதரவுடனும் மேற்கொள்ளப்படும் 'வேட்டையாடப்படும் வனவிலங்கு இறைச்சி வேண்டாம் என்று கூறுங்கள் " (“දඩමසින් වැළකෙමු” / Say No To Bushmeat) என்ற சமூக ஊடக அடிப்படையிலான மும்மொழி விழிப்புணர்வு பிரச்சாரம், தற்போது நடைமுறையில் அமுற்படுத்தப்படும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இத்தேவை சம்பந்தமான விழிப்புணர்வைக் கொண்டுவருவதில் அவர்களுடனும் ஏனையவர்களுடனும் இணைந்து கொண்டு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலான உரையாடல்களை கொண்டு செல்ல உதவுங்கள்.


புகைப்படங்கள் 1, 2 மற்றும் 4: வனவிலங்கு பாதுகாப்புத் துறையின்

புகைப்படம் 3: விஷ்வா சி துஷ்மந்த

இறுதி கலைப்படைப்பு: கூட்டினால் The Parrotfish Collective


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .