Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2020 நவம்பர் 01 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுதினன் சுதந்திரநாதன்
இலங்கையின் ஒவ்வொரு காலண்டினதும் மொத்தத் தேசிய உற்பத்தி, அந்தக் காலாண்டு முடிவடைந்து, ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெளியாகிவிடும். நல்லாட்சி அரசாங்கத்தினுள் குழப்பங்கள் நிலவிய காலத்திலும் கூட, இந்தத் தகவல் அறிக்கையில் எந்தத் தாமதமும் ஏற்பட்டதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்பும் கூட, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தித் தொடர்பானத் தகவல்கள், பொருத்தமானக் காலப்பகுதியில் வெளியாகியிருந்தது. இதன்போது, 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி, -1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. கொரோனாவின் ஆரம்ப நிலை, நாட்டின் முடக்கம் என்பவற்றை, இதற்கானக் காரணமாகக் காட்டி, அரசாங்கம் தப்பித்துக் கொண்டதுடன், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை மும்முரமாக ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள் நிலையில், 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி தொடர்பானத் தகவல்களை, நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதாரத் தகவல்களேயே, தற்போதுள்ள அரசாங்கம் வெளியிடாமல் மறைக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். பொருளாதார வல்லுநர்களின் கணிப்பின் படி, இலங்கையின் 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியானது, -17 சதவீதமாக பதிவாகியுள்து. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான், நாட்டின் துறைசார் வளர்ச்சிகளும் உள்ளது என்பது, மேலதிகத் தகவல். ஆனால், இதை மக்களுக்குப் பகிரங்கபடுத்துவதில், இலங்கை அரசாங்கம் பின்னடித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
தாங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றிய முதலாவது காலாண்டே, மிக மோசமான பெறுபேறுகளை, மக்களிடம் காட்ட வேண்டிய சூழ்நிலை வருகின்றபோது, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் போன்ற தங்களுக்கு சாதகமானத் திட்டங்களை நிறைவேற்றுவதில், அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனும் சுயலாபக் காரணங்களுக்காக, பொருளாதாரத் தகவல்கள் வெளியிடப்படாமல் , அரசாங்கம் பின்னடிக்கின்றது என்பதே உண்மை.
இதன்மூலமாக, இறுதியில் சாமானிய பொதுமக்களாகிய நாங்களே பாதிக்கப்படுகின்றோம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை எனலாம். ஆனாலும், இந்தச் சாமானிய மக்களின் வாக்குகளால் உருவான இந்தச் சர்வாதிகார நாடாளுமன்றமும் அதன் அரசியல்வாதிகளும், பொதுமக்களைப் பற்றி கவலைகொண்டதாக தெரியவில்லை.
ஜூன் 2020ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இலங்கையின் 2020ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதியானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, -26.4 சதவீத வீழ்ச்சியைக் கொண்டிருந்தது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையில், -49.7 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அத்துடன் தேயிலை ஏற்றுமதி -14 சதவீதத்தாலும் கட்டட நிர்மாணத்துறை -16 சவீதத்தாலும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.
உண்மையில், இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு, தற்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முகங்கொடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமையால், பொருளாதார வீழ்ச்சி என்பது, சாதாரணமானதாகி விட்டது. உதாரணமாக, தன்னுடைய பொருளாதாரம் -23.9 சதவீத வீழ்ச்சக்கு முகங்கொடுத்திருப்பதாக, இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன், 200 மில்லியன் பேர் வேலையை இழந்திருப்பாதாகவும் தரவுகளில் தெரிவித்துள்து. இந்தியாவின் பெரும்பாலான ஊழியர்கள், நாள் அடிப்படையிலானக் கூலியை எதிர்பார்த்திருக்கும் ஊழியப்படை எனும் ரீதியில் இந்த வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தியாவைத் தவிர்த்து, பொருளாதார வீழ்ச்சியானது, அவுஸ்திரேலியாவில் -7 சதவீதமாகவும் பிரேசிலில் -9.7 சதவீதமாகவும், பிரித்தானியாவில் -20 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது என, புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்து.
இதேநிலையைதான், இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. ஆனால், இலங்கையின் அரசாங்கம், தன்னுடைய சுயலாப நோக்கங்கள் சிலவற்றை அடைந்துகொள்ள, இந்த வீழ்ச்சியை மூடி மறைப்பது சரியானதாக அமையாது.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு, ஓரளவுக்குப் பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் கொண்ட காலாண்டு ஆகும். உலக வங்கி கூட, இந்தக் காலாண்டில் இலங்கையால் 6-7 சதவீத வளர்ச்சியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, நாட்டை சாதாரண நிலைக்கு திருப்பியமையே, இதற்குக் காரணமாக அமைந்திருந்தது. ஆனால், அந்த மனத் திருப்தி, "மினுவாங்கொட கொரோனா கொத்தனி" காரணமாக நீடித்திருக்கவில்லை. மூன்றாம் காலாண்டில் ஏதாவதொரு வளர்ச்சியை ஏற்படுத்தி, இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சியை, இந்த வளர்ச்சியைக் கொண்டு மறைத்துவிடலாம் எனும் திட்டத்துடன், அரசாங்கம் செயற்பட்டு வந்தது. ஆனால், கொரோனா தொடர்பில் அரசாங்கமே அலட்சியமாக செயற்பட்டமை அரசாங்கத்தின் திட்டத்துக்கு மாபெரும் அடியாக அமைந்துவிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், இலங்கை அரசாங்கம் காட்டிய மெத்தனப் போக்கும், அலட்சியமுமே இன்று, இலங்கை மீண்டுமொரு பொருளாதாரச் சரிவை நோக்கி பயணிப்பதற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. வருமுன் காப்போம் என்பதை மறந்து, வந்தபின் பார்ப்போம் என, இலங்கை அரசாங்கம் சுயலாபத்துக்காக செயற்பட ஆரம்பித்ததன் விளைவே இது எனலாம்.
உண்மையில், 2021/22ஆம் ஆண்டுகள் வரை, கொரோனா வைரஸுக்குப் பொருத்தமான மருந்து கண்டுபிடிக்கும்வரை, இதுமாதிரியான முடக்கல்கள், பிரச்சினைகளை நாம் சந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படியாயின், அதற்கு ஏற்றவகையில், நாம் தயாராக வேண்டும் என்பது, மிக முக்கியமானது. வீம்புக்காக கைமீறி போகின்றச் சந்தர்ப்பங்களிலும் எந்தவிதமானத் தீவிர நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டுப்படுத்திவிட முடியுமெனச் செயற்படுவதை விடுத்து, யதார்த்தத்தை அங்கிகரித்துக் கொண்டு, விட்ட தவறுகளிலிருந்து சரியாகச் செயற்படுகின்ற மக்களின் அரசாங்கமாக, இந்த அரசாங்கம் செயற்படுவதன் மூலமாகவே, நாட்டை மிகச்சரியானப் பொருளாதார பாதைக்குள் கொண்டுச் செல்ல முடியும்.
மினுவாங்கொட போன்று, எதிர்காலத்திலும் இலங்கையில் கொரோனா கொத்தணிகள் தோற்றம் பெறலாம். அதற்கான வாய்ப்புகள் இல்லையென முற்றாக மறுத்துவிட முடியாது. ஆனாலும், அப்படியான சூழ்நிலைகளில் செயற்படத் தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. காரணம், இனி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்கின்ற நிலையில்தான் நாமும், நம்முடைய பொருளாதாரமும் இருக்கிறது. இதற்கு மேலானப் பொருளாதார வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்கின்ற நிலையில் சாமானிய மக்கள் இல்லையென்பதே உண்மை. எனவே, இதைத் தவிர்க்கும் வகையிலான மூலோபாய திட்டங்களுடன் மக்கள் சார்பாக, அரசாங்கம் செயற்படவேண்டியது முக்கியமானது.
இலங்கை அரசாங்கத்தின் கொரோனா தொடர்பிலான அலட்சியபோக்கானது, மீண்டும் நாட்டை முடக்கத்துக்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாது, வணிகங்கள் தங்களை மீளகட்டமைத்துக்கொள்ள வழங்கிய நிதியுதவிகளையும் ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நட்ட நிலையிலிருந்து மீட்சி அடைந்தவர்கள் கூட, தற்போது மீண்டும் பழைய இடத்துக்கே சென்று விட்டதை உணர கூடியதாக இருக்கிறது. வங்கிகள் சலுகை அடிப்படையில் வழங்கிய வட்டியில்லா கடனைக் கூட மீள்செலுத்தும் நிலையில் வணிகங்களும் மக்களும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தநிலையில், மீண்டுமொரு நிதி சலுகை வழங்கக் கூடிய நிலையில், நிதி நிறுவனங்கள் உறுதியாக இருக்கிறதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
இலங்கையில் தற்போது எழுந்திருக்கும் இந்தக் கொரோனா பாதிப்பானது, புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கமானது, இந்த இக்கட்டான குறித்த சில மாதங்களில், எப்படி மெத்தன போக்காகவும் அலட்சியமாகவும் செயற்பட்டிருக்கிறது என்பதை, வெளிப்படையாகக் காட்டி இருக்கிறது. ஆனால், இந்த நிலை எல்லைமீறி போவதற்கு முன்பதாகவே, அரசாங்கம் தன்னுடைய ஈகோவை விடுத்து, களத்தில் இறங்கி அணைக்கட்டுவது மிக மிக அவசியமானது.
50 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025