2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

‘வருவாயை விட வாடிக்கையாளரே முக்கியம்’

J.A. George   / 2020 மார்ச் 12 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறன்பேசிகள் இன்று உலகைக் கையகப்படுத்தியுள்ளன. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45.12 சதவீதமானவர்கள்  திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.  உலகில் தற்போது, திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.5 பில்லியன்; இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டிலிருந்து கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வருடத்தில் 2.5 பில்லியன் பயனர்கள் மட்டுமே இருந்தபோது, குறித்த எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில் 33.58 சதவீதமாகக் காணப்பட்டது.

மக்களின் வாழ்க்கையில் வசதியைக் கொண்டுவருவதும், தகவல்தொடர்புகளை எளிதாக்குவதுமே திறன்பேசிகளின் முதன்மைப் பயன்பாடுகள் எனலாம். எனவே, எந்தவொரு புதிய திறன்பேசி போன்ற சாதனங்களில், பயனர்கள் பதிவிறக்கும் முதல் பயன்பாடுகளில், பாதுகாப்பான தகவல் தொடர்பு செயலியும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, வைபர் போன்ற செயலிகளைக் குறிப்பிடலாம்.

வைபர், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான செயலியாக உள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அடைந்துள்ளதாக  அண்மையில் வைபர் அறிவித்திருந்தது.

வைபர் உலகளவில் சிறந்த தகவல் தொடர்பு பயன்பாடுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டிலும் இந்தச் செயலியை மக்கள் பயன்படுத்தும் நிலையில்,  10-15 நாடுகளில் வைபர் சேவை தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இதனால்  உள்ளூர் பயனர்களின் தாய்மொழி ஊடான செயலி, பயன்பாட்டுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

ஆசிய - பசுபிக் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால், அங்கு திறன்பேசிகளின் பயன்பாட்டு வளர்ச்சி, 70 சதவீதமாக உயர்வடைந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பானது வைபருக்கான வளர்ச்சியின் முடுக்காகச் செயல்படுகிறது.

வைபரின் உலகளாவிய பயனர் எண்ணிக்கையில், ஆசிய-பசுபிக் பிராந்தியமானது  25சதவீத பயனர்களைக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி வைபர் நிறுவனத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய இயக்குநர் அனுபவ் நாயரை ‘தமிழ்மிரர்’ சார்பில் சந்தித்து பேசக்கிடைத்தது.

கே: வைபருக்கான முதல் ஐந்து சந்தைகளில் இலங்கை உள்ளது. இது எப்படிச் சாத்தியமானது?

ஒட்டுமொத்தச் சந்தையின் அளவு மற்றும் ஊடுருவல், ஊக்கமளிக்கும் ஆரோக்கியமான வளர்ச்சி எண்கள்,  சந்தையைத் தக்கவைத்திருக்கும் ஆற்றல் ஆகிய மூன்று காரணிகளால் இந்தச் சாத்தியம் ஏற்பட்டது.

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு  நாடு என்ற வகையில், இலங்கையில் எங்களிடம் உள்ள பார்வையாளர்களின் தரம் மிகவும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் பார்த்ததிலிருந்து, எல்லோருக்கும் வைபரைப் பயன்படுத்த அதிக காரணங்களும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

பயனர்கள் வைபர் செயலியைப் பயன்படுத்துவதில் செலவழித்த நேரம் முக்கியமானது; உலக சராசரியை விட, அது இலங்கையில் அதிகமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்.

இலங்கையில் தற்போது 14 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வைபர் பயனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட,  இந்த வருடம் 13-14% செயற்பாட்டு வளர்ச்சி வீதம் உள்ளது. 

இந்த வளர்ச்சியானது, கொழும்பு,  கண்டி போன்ற பெரிய நகரங்களில் காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி,  நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள சிறிய நகரங்களிலும் வைபர் பயன்பாடு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

நாட்டின் பிற பிராந்தியங்களில், வைபரின் பயன்பாடு வளர்ச்சியடைவதை நாங்கள் கண்டிருக்கிறோம், மேலும், அந்தப் பயன்பாட்டை உறுதிப்படுத்த எம்மிடம் தரவுகள் உள்ளன. 

நாங்கள் சில அமைப்புகள், மக்களுடன் பேசியுள்ளோம், இது நாட்டின் மிகச்சிறிய பகுதிகளில் உள்ள மக்களும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகின்றமையை உறுதிப்படுத்தியுள்ளன.

கே: தொடர்பாடல் செயலிகள் அதிகளவில் உள்ள நிலையில், குறிப்பாக வைபரின் பயன்பாடு, இலங்கையில் அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணமாக எதைப் பார்க்கின்றீர்கள்?

நாட்டில் இணையத்தின் உள்கட்டமைப்பு, திறன்பேசிகளின் குறைந்த விலைகள் ஆகியவற்றின் காரணமாக, வைபரின் பயன்பாடு பரவலான முறையில் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு காரணிகளும், மக்கள் வைபரின் பயன்பாட்டை அணுக உதவுகின்றன.

கே: சில நாடுகளில் வைபர் தனது செயற்பாட்டைத் தனிப்பயனாக்கி உள்ளதாக அறிவித்திருந்தது. இலங்கையில் அதற்காக, எந்தவிதமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

இலங்கையில் உள்ள வைபர் பயனர்கள், செயலியை அதிகமாக அணுகுவதை ஊக்குவிக்கும் வகையில்,  கடந்த ஜனவரி மாதத்தில் வைபர், தமிழ், சிங்கள மொழிகளை உள்ளடக்கிய ஒரு புதிய உள்ளூர் இடைமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட, நாட்டில் ஆங்கில ஊடுருவல் மிக அதிகமாக இருக்கும்போது, வைபர் போன்ற பயன்பாடுகள், சேவைகளுக்கு உள்ளூர்மயமாக்கல் என்பதில் சிறந்த எதிர்காலம் இருக்கும்.

2010ஆம் ஆண்டில், இலங்கை சந்தையில் நுழைந்தபோது, இந்தப் பயன்பாடு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வைபர் பயன்பாட்டை உள்ளூர் மயமாக்குவதற்கும், பிற இலங்கை அமைப்புகளுடன் கூட்டுச் சேருவதற்கும் 2015ஆம் ஆண்டில் வைபர் முதலீடு செய்யத் தொடங்கியது.

இலங்கை சந்தையில், உள்ளூர் மயமாக்கப்பட்ட வைபர் ஸ்டிக்கர்கள் சிறப்பாகச் செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம். சிங்களம், தமிழ் புத்தாண்டை  முன்னிட்டு, ஏப்ரல் மாதத்தில் பாரம்பரிய விடயங்களை முன்னிறுத்தும் வகையில், உள்ளூர் பயனர்களுக்காக கலாசார ரீதியாக, நாங்கள் ஏதாவது செய்யவுள்ளோம்.

கே: தமிழ் - சிங்கள மொழிகளைக் கொண்ட இடைமுகத்தை அறிமுகப்படுத்திய பின்னர், வைபரின் வளர்ச்சி இலங்கையில் எவ்வாறு உள்ளது?

தமிழ் - சிங்கள மொழிகளைக் கொண்ட இடைமுகத்தை நாங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தியபோது, நாட்டின் கிராமப்புறங்கள்,  ஆங்கிலம் முடியாத பயனர்கள், அதனை அதிகளவில் பயன்படுத்தும் போக்கைக் காண முடிந்தது.

ஜனவரி மாதத்தில், நாங்கள் உள்ளூர் மொழிகளைச் சேர்த்தோம், ஏனென்றால், இது நாட்டுக்கும் குறிப்பாக, ஆங்கிலம் பேசாத பயனர்களுக்கு, மிகவும் முக்கியமானது என்று நாங்கள் உணர்ந்தோம்.

தனிப்பயனாக்கப்பட்ட வைபரில் காணப்படும் ஸ்டிக்கர்கள், தொடர்பாடல்கள் உட்பட உள்ளூர்மயமாக்கப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களும் உள்ளூர் திறமையாளர்களால் உருவாக்கப்பட்டவை.

தற்போது அவர்களில் பலர் முழுநேர ஊழியர்களாக உள்ளனர், நாங்கள் ஏனைய ஆலோசகர்களையும் பயன்படுத்துகின்றோம். அத்துடன், ஏனைய சில படைப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் எம்முடன் பணியாற்றுகிறார்கள். அனைத்து உள்ளடக்கங்களும் இலங்கையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

ஆரம்பத்தில்  நாங்கள் எதையாவது அறிமுகப்படுத்தி, இங்கு மொழிபெயர்க்கப் பழகினோம். எனினும், இலங்கையில் உள்ளவர்கள் விரும்புவதை, இலங்கையர் மட்டுமே புரிந்துகொள்வார்கள் என்றும்  நாட்டுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல, என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்,

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் பல நிறுவனங்களுடனும் ஊழியர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். அத்துடன், செயலியின் உள்ளடக்கத்தை வழங்க, இவர்கள் உதவி செய்கின்றார்கள். இவ்வாறான காரணிகள், 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கே: ஏனைய தொடர்பாடல் செயலிகளுக்கு மத்தியின், பயனர்களின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் கடுமையான டெங்கு தொற்றுநோய் பரவல் காணப்பட்ட போது,  எங்கள் பயனர்கள் அனைவருக்கும் தகவல்தொடர்புகளைப் பரப்ப, எங்கள் தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் நாங்கள் பணியாற்றினோம்.

இலங்கையானது வைபரின் கவனத்தை ஈர்த்த சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்ட போதும், தற்போது பயனர்கள் பயன்பாட்டில், அதிக நேரம் செலவழிக்க அதிக சந்தர்ப்பங்களை உருவாக்குவது தொடர்பில் எமது கவனம் மாறிவிட்டது.

பயன்பாட்டில் பயனர்கள் செலவழித்த நேரம் கடந்த 18 மாதங்களில் 40-45 சதவீதம் அதிகரித்துள்ளது.  நாங்கள் புதுமைகளில் கவனம் செலுத்துகிறோம்; சில நேரங்களில்  அவை வேலை செய்யும், சில நேரங்களில் வேலை செய்யாது.  எனினும், புதிய சேவைகளைத் தொடர்ந்து வெளியிடுகிறோம். புதுமைக்கான நிலையான முயற்சி மிகவும் பொருத்தமானது.

வைபர் செயலியில் ஒரு பயனர், யாரோ ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, ஒரு மில்லி விநாடி மாத்திரமே எடுப்பதை நாங்கள் பார்க்கிறோம்; இந்தச் செயல்முறை இன்னும் சற்று விரைவாகச் செல்வதற்கும், அதற்கு பயன்படும் டேட்டாவின் (தரவு) அளவையும் குறைக்க முடியுமா என்பது தொடர்பிலும் நாங்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளோம்.

கே: தொடர்பாடல் செயலி என்றதுமே தனிநபர் பாதுகாப்பு, தனியுரிமை கொள்கை போன்ற விடயங்கள் மிக முக்கியமானவை. வைபர் இதனை எவ்வாறு கையாள்கின்றது?

இலங்கையில், பயனர் தனியுரிமையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்; இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.  அத்துடன், இலங்கைச் சந்தையில் தனியுரிமை தொடர்பிலான ஆய்வும் எமக்கு முக்கியமானது. ஏனென்றால், ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, தனியுரிமைக் கொள்கை உள்ளிட்ட விடயங்கள் இங்குள்ள சாதாரண மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது.

எங்கள் செயலியில்  உள்ள உரையாடல்களை யாராலும் படிக்க முடியாது, அது எங்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயம் ஆகும். நாங்கள் ஒரு வணிக நிறுவனம்; வருவாயை ஈட்டுவதற்காகவே நாங்கள், நிச்சயமாக இந்தத் துறையில் இருக்கிறோம்; எனினும், எங்கள் பயனர்களை, எங்கள் வருவாயை விட முன்னிலைப்படுத்துகிறோம்.

இவ்வாறான பல காரணங்கள், இலங்கை மக்கள்  வைபர் செயலியை, ஒரு தகவல்தொடர்பு பயன்பாடாக தெரிவு செய்ய வழிவகுத்துள்ளது. மேலும் உள்ளூர் மயமாக்கல், உள்ளூர் பயனர்களுடன் சிறப்பாக இணைந்துக் கொள்ள வழியேற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .