2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக 2021 அமையும்

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச. சேகர்

கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், பெருமளவானோர் விவசாயத் துறைசார் தொழில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். .

நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை மாத்திரம் இந்தத் துறை வழங்கும் நிலையில், ஏற்கனவே மொத்த பணியாளர்களில் 27 சதவீதத்தை இந்தத் துறை தன்வசம் கொண்டுள்ளது. இதனால், இந்தத் துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்கள் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

ஏப்ரல் - ஜுன் மாத காலப்பகுதியில் விவசாயத் துறையில் பெருமளவானோர் ஈடுபட ஆரம்பித்தனர். உணவு இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதை குறைக்கும் வகையிலும் இவ்வாறு பலர் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல்கள், முடக்கநிலை மற்றும் ஊரடங்கு அமல்ப்படுத்தல்கள் போன்றவற்றால் இந்த நிலையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த புள்ளிவிவரங்கள் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், விவசாயத் துறையில் 32,397 புதிய தொழில்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதில் வனாந்தரச் செய்கை மற்றும் கடற்றொழிலும் அடங்குகின்றன. இதனூடாக இந்தத் துறையில் மொத்தமாக பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,159,609 ஆக பதிவாகியிருந்தது. இது இலங்கையில் காணப்படும் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 27.1 சதவீதமாகும்.

விவசாயத்துறையில் மொத்தமாகப் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 168,717 நபர்களால் அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பை வழங்கும் இரு துறைகளான தொழிற்துறை மற்றும் சேவைகள் போன்றவற்றில் எழுந்த தொழில் இழப்புகளை ஓரளவுக்கு ஈடு செய்யும் வகையில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகள் எழுந்தமை அமைந்திருந்தது. ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டில் நாட்டில் தொழிலற்றவர்களின் எண்ணிக்கையை 5.4 சதவீதமாக குறைக்க முடிந்திருந்தது. அக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பணியாற்றியவர்கள் பலர் தமது சொந்தப்பகுதிகளுக்கு திரும்பியிருந்த நிலையில், அவர்கள் விவசாயத்தில் அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்தனர்.

ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டில் தொழிற்துறையைச் சேர்ந்த 27,286 பேர் தொழிலை இழந்ததுடன், சேவைகள் துறையைச் சேர்ந்த 48,558 பேர் தொழிலை இழந்திருந்தனர். விவசாயத் துறையில் அதிகளவு ஈடுபாடு ஏற்பட அத்துறையின் மீது அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டிருந்த அதீத அக்கறை, நிவாரணங்கள், நிதி உதவிகள், அறிவுப் பகிர்வு, சந்தை இணைப்புகள் மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட விலைகள் போன்றன அமைந்திருந்தன. அலுவலகத் தொழிலைவிட்டு தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியிருந்தவர்களுக்கு இந்த வசதிகள் விவசாயத் துறைக்கு அதிகளவு கவர்ந்திழுப்பதாக அமைந்திருந்தன.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மற்றும் நாட்டினுள் உறுதியான உணவுக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்துடன், மேலதிக விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதனூடாக உயர் அந்நியச் செலாவணியை திரட்டுவதும் நோக்காக அமைந்திருந்தது.

எவ்வாறாயினும், 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழிலற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்பட்டது. சுமார் 411,318 பேர் தொழிலின்றிக் காணப்பட்டனர். இது 4.8% ஆக பதிவாகியிருந்தது. 

ஒரு பொருளாதாரத்தில் தொழிலின்றிக் காணப்படுவோரின் எண்ணிக்கை சாதாரணமாக 4% க்கு குறைவாக காணப்படுமாயின், முழுமையான தொழில்நிலை என கருதப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மொத்தமாக தொழிலில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டது.

பொருளாதாரத்தின் மூன்று பிரதான துறைகளில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை ஜுன் மாத நிறைவில் 7,977,000 ஆக பதிவாகியிருந்தது. இது ஆண்டின் முற்பகுதியில் 8,181,442 ஆகவும், ஒரு வருட காலப்பகுதிக்கு முன்னதாக 8,203,018 ஆகவும் காணப்பட்டது. இதில் பாரிய வேறுபாடு காணப்படாத போதிலும், விவசாயத் துறையில் காணப்படும் குறைந்தஉற்பத்தித் திறன் காரணமாக எழக்கூடிய உற்பத்தித் திறன் இழப்புகள் மறறும் வருமானம் சீரின்மை தொடர்பில் எழக்கூடிய பிரச்சனைகள் தொடர்பில் கொள்கை வடிவமைப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் குறைந்தளவிலான தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, ஈட்டக்கூடிய அந்நியச் செலாவணியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டில் மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்கள் மற்றும் நிலவும் பாரிய பொருளாதார அழுத்தகரமான சூழல் காரணமாக, இலங்கைக்கு தற்போது உறுதியான ஏற்றுமதிகள் அவசியமாக அமைந்துள்ளது.

உலகளாவிய நாடுகளில் வீரியமாகப் பரவும் கொவிட்-19 தொற்றின் புதிய நிலைமாற்றத்தின் காரணமாக இலங்கையிலும் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுகின்றன. இவ்வாறான பாதிப்பு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு மேலும் கொடுப்பனவுகள் மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி இருப்பு வசதிகள் இல்லை. இவ்வாண்டில் எவ்வாறான சவால்கள் எழுந்தாலும், விவசாயத்திலிருந்து, உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற துறைகளுக்கு தொழில் வாய்ப்புகளை மீளமைப்பது என்பது பொருளாதாரத்தை மீட்சிப் பாதையில் வழிநடத்துவதற்கு அத்தியாவசியமானதாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .