2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

தேயிலை விளைச்சல் வீழ்ச்சியடையுமாம்

S.Sekar   / 2021 ஜூலை 26 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் கணிப்பு

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உர பற்றாக்குறைக்கு திட்டவட்டமான தீர்வு இல்லாததனால் 2021ஆம் ஆண்டின் இறுதியில், தேயிலை விளைச்சல் கடந்த ஆண்டை விட 30% வீழ்ச்சியடையும் என்றும், மார்ச் 2022க்குள் மொத்த தேயிலை உற்பத்தி அரைப்பங்காகக் குறைந்துவிடும் எனவும் இலங்கையில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தேயிலை உற்பத்தியில் 70%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிறு தேயிலை தோட்டத் துறை, 500,000 தோட்ட உரிமையாளர்களைக் கொண்டுள்ளது, இது 138,900 ஹெக்டேர், 14 மாவட்டங்கள், 123 மாவட்ட செயலகங்கள் மற்றும் 3,692 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்தத் துறையானது நாட்டிலுள்ள கிராமப் புறங்களிலுள்ள மக்களில் சுமார் 20% ஆன 5,000க்கும் மேற்பட்டவர்களின் கிராமப்புற பொருளாதாரங்களுடன் இந்தத் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கே.எல். குணரத்ன கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு ஆதரவளிக்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஆனால் அதை அடைவதற்கு, அனைத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலனுக்கும், புலத்தின் முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு நடைமுறைத் திட்டம் நமக்குத் தேவை. பல சிறு தோட்ட உரிமையாளர்கள் சுமார் இரண்டு மாதங்களாக உர தட்டுப்பாட்டை அனுபவித்து வருகின்றனர். உர இறக்குமதி தடை விதிக்கப்படுவதற்கு முன்பே மற்றவர்கள் உரங்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, 2021ஆம் ஆண்டிற்கான தேயிலைத் தோட்டங்களுக்கு உரங்கள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.' என அவர் தெரிவித்தார்.

'எங்கள் தொழில்துறையில் பலருக்கு, தேயிலையே அவர்களின் ஒரே குறிப்பிடத்தக்க வாழ்வாதாரமாகும். கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தின் விளைவாக வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த சமூகங்கள் இப்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. குழந்தைகளுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் கல்விக்கு பணம் செலுத்த இந்தத் துறையைச் சார்ந்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் மக்கள் இங்கு உள்ளனர். தற்போதைய உர பற்றாக்குறையால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர், அதற்கான தீர்வுக்காக போராட்டங்களைச் செய்கிறார்கள். இது விரைவில் தீர்க்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.'

தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதால் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வருமானம் குறைவது இலங்கையின் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

'இந்தத் துறையில் போக்குவரத்து முதல் தேயிலை வாங்குபவர்கள் வரை பல இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட துறைகள் உள்ளன. தேயிலைத் துறையின் வீழ்ச்சி இந்த அனைத்து துறைகளையும் பாதிக்கும். இந்த நிலைமையை நிர்வகிக்க முறையான அமைப்பு அல்லது திட்டம் இல்லா விடின், கிராமப்புற பொருளாதாரம் நிச்சயமாக வீழ்ச்சியடையும்.'  என குணரத்ன சுட்டிக்காட்டினார்.

கனிம உரங்களை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் முழுமையான தடை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உரங்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், தற்போதுள்ள உர இருப்புக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த விவசாய மற்றும் பெருந் தோட்ட பொருளாதாரத்தை முழுமையான கனிம விவசாயத்துடன் கூடிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான முடிவின் ஒரு பகுதியாக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய எதிர்கால எண்ணத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதற்கான கோட்பாடு இல்லாதபோது, உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, மேலும் ஏற்றுமதி பயிர்களின் அளவு வீழ்ச்சியடைந்து வருவது ஏற்கனவே ஒரு பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .