Niroshini / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்க வேண்டுமெனத் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அதன் பின்னரே, ஏனைய விடயத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை, சோழமண்டலக் குளம் பகுதியில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி, 250 ஏக்கர் வரை காணப்படுகின்றது.
இந்தக் காணியில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலுப்பைக்கடவை - அந்தோனியார்புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், அவர்களுக்கு குறித்த காணி உரிய முறையில் வழங்கப்படாமை குறித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், அண்மையில், காணி அமைச்சரிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு அமைவாக, இன்று (27) காலை,மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில், வடமாகாண காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிமலன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட உரிய அதிகாரிகள், இலுப்பைக்கடவை - சோழ மண்டலக்குளம் பகுதியில் உள்ள குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
இதன் போது, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணத்தை பெற்றுக் கொண்டவர்களும் தனி நபர்களும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், குறித்த பகுதியில், காணி துப்புரவு செய்திருந்த நிலையில், அவர்களின் துப்புரவு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே, ஏனைய விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என, உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பணிப்புரை விடுத்தார்.
இதற்கமைவாக, துப்புரவு செய்தவர்களின் பணிகள் நிறுத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு, காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான மேலதிக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் அபிவிருத்திக் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026