2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

காப்புணர்வு

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று எனது பதினொரு வயது மகனிடம் சொன்னபோது அவன் கேட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று. இந்தக் கேள்வியின் குரூரம் என்னை விட்டு அகல நீண்ட நாள்களானது. இந்தக் கேள்வியை அவன் கேட்பதற்குக் காரணங்கள் உள்ளன.   

ஒரு பெண் மறுமணம் செய்துகொள்வதற்குத் தயங்குவதே வருகிறவன் தனது பிள்ளைகளைச் சமத்துவமாக, கௌரவமாக நடத்தமாட்டான், கவனிக்க மாட்டான் என்கின்ற தயக்கங்களால்தான். இந்த தயக்கங்கள் அசாதாரணமானதில்லை. அவள் பக்கத்து வீட்டிலோ, உறவினர்களில் யாரோ, அயல் ஊரிலோ அறிந்த பெண்கள் யாராவது இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.   

குறைந்தபட்சம் மனைவியின் முன்னைய திருமணத்தில் வந்த குழந்தைகளைத் துன்புறுத்திய, பாரபட்சமாக நடத்திய ஏதோவொரு செய்திக் குறிப்பைத் தானும் அவள் ஊடகங்களில் படித்திருக்கக் கூடும். இப்படி முன்னைய திருமணத்தில் வந்த குழந்தைகளை ஆண்கள் மட்டுந்தான் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று பொருள் கொள்ளவும் முடியாது. முந்தைய திருமண உறவில் பெற்ற கணவனின் பிள்ளைகளைப் பாரபட்சமாக நடத்துகின்ற துன்புறுத்துகின்ற பெண்களும் இருக்கின்றார்கள்.   

எனது மகன் பத்ரிக்கு இந்த அச்சம் எப்படி வந்திருக்கும்? பிறந்த நாள் முதல் இன்று வரைக்கும் அவன் எனது கைகளுக்குள்ளேயேயும் கவனிப்பிலும் வளர்ந்த குழந்தை. தகப்பனின் அரவணைப்புப் பற்றி அவனுக்கு எந்தத் தெளிவும் கிடையாது. அவன் அதை அனுபவித்ததே இல்லை. இந்த பதினோர் ஆண்டுகளில் தகப்பனுக்காக அவன் ஏங்கிய சந்தர்ப்பங்கள் எதுவுமேயில்லை. இவ்வளவு ஏன் அவன் அவரைப் பற்றிக் கேட்டதுகூடக் கிடையாது.   

“என்னையும் உங்களையும் பிரிச்சுடுவாரா?” என்ற கேள்வியில் தொனிக்கும் பாதுகாப்பற்ற உணர்வு இந்த அனுபவத்திலிருந்துகூட வந்திருக்கலாம். இதுவரை காலம் அவன் பாதுகாப்பாக உணர்ந்தும் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் மட்டுமென்றிருக்க, இந்த

“ஆண்” உறவும் வரவும் அவனைப் பதற்றப்படுத்துகிறது என்பது ஒரு காரணம். மற்றைய காரணம் அவன் சேகரித்திருக்கும் ஏனைய புற அனுபவங்கள். இந்த அனுபங்கள் அவனது பள்ளியில் பழகும் நண்பர்களின் உரையாடல்களிலிருந்து கிடைத்திருக்கக் கூடியன.   
இப்படியொரு கேள்வி ஏன் அவனுக்குத் தோன்றியதென்று அவனைக் கேட்காமல் இருப்பேனா?   

பதில்கள் அவனிடம் உள்ளன.  “எங்க கிளாஸ்ல இருந்த சாஜித் இப்ப வேற ஸ்கூல் மாறிட்டான் மம்மீ. அவனை இப்ப போடிங் ஸ்கூல்ல போட்டுட்டாங்களாம்”   

சாஜித்தின் தகப்பன் ஒரு விபத்தில் இறந்து போக, தாய் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் அடிக்கடி சண்டையும் பிரச்சினையும். சாஜித்தைக் காரணமாகக் கொண்டுதான் பல சண்டைகளும் முரண்பாடுகளும் உருவாகுவதாக ஊகித்து அவனை விடுதியுள்ள ஒரு பள்ளிக்கு வேறோர் ஊரில் கொண்டு விட்டிருக்கிறார்கள். பள்ளியிலிருந்து விலகிச் செல்லும்போது குழந்தை அவ்வளவு அழுதிருக்கிறான்.   

“சாஜித் நீ ஏன் விலகிப் போற. இங்கேயே எங்களோட படிடா”  

“எனக்கும் ஆசதான்... எங்க உம்மா கல்யாணம் பண்ணியிருக்கிற ஆளுக்கு என்னைச் சுத்தமாப் பிடிக்கலடா”. நான் வீட்டில் இருந்தா அவரு இருக்க மாட்டேன் சொல்லிட்டாரு...”   

இதுபோல மூன்று சம்பங்களை பள்ளியிலிருந்தே தெரிந்து கொண்டிருந்தான் பத்ரி. இந்த அனுபவங்களிலிருந்துதான் அந்தக் கேள்வி வருகிறது.   

“என்னையும் உங்களையும் பிரிச்சுடுவாரா?” என்கிற கேள்வியில் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வைக் களையாமல் ”அப்படி நடக்காது” என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியாது.   

உறவில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதென்பது அத்தனை எளிதாக நடந்துவிடக் கூடியதில்லை. அதற்குப் பொறுமையும் காலமும் தேவை.   

நான் மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததே பத்ரியின் சம்மதத்துடன் தான். சம்மதமென்று சொல்வது, வெறுமனே குழந்தையின் தலையசைப்போ, “உங்க இஷ்டம்” என்ற பதிலையோ அல்ல. காதலில் இருக்கிறேன் என்று அறிவித்த பிறகு பத்ரியும் அவரைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. அதுவொரு நீண்டகாலச் செயற்பாடு. இந்த நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நடவடிக்கை குழந்தைகள் தரப்பிலிருந்து மட்டுமல்ல, புதிய நபரின் தரப்பிலிருந்தும் வெளிப்பட வேண்டும்.   

எனது இணையரும் பத்ரியும் பேசி உறவாடும்போது நான் தலையிடாமல் சுதந்திரமளித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த இடையீடுமின்றிப் பேசும் சூழல் அமைந்ததும் பத்ரி தனது கேள்விகளைத் தயக்கமின்றிக் கேட்க ஆரம்பித்தான். சில மாதங்களில் இருவரும் நண்பர்களாகியது நடந்தது. இதில் எனது பங்களிப்பை விடவும் இணையரின் பங்களிப்பே அதிகம். பத்ரிக்கு என்னவெல்லாம் பிடிக்கும், அவனுக்கு ஆர்வமூட்டக் கூடிய விசயங்கள் எவை? என்பதையெல்லாம் என்னிடமிருந்தும் பத்ரியிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.   

“நான் உங்களை எப்படிக் கூப்பிடணும், பெயர் சொல்லிக் கூப்பிடலாமா?” என்று பத்ரி கேட்டபோது, “கூப்பிடத்தானே பெயர் வைத்திருக்கிறோம்” என்றதும் அவன் முகம் பூரித்துப் போனான்.   

இந்த உரையாடலின் பிறகு பத்ரிக்கு அவரிடம் நெருக்கமான நேசம் வெளிப்பட்டதைக் கவனித்தேன்.    

தன்னிடமிருந்து தாயை அவர் பிரித்துவிடுவார் என்ற பயம் அவன் மனதிலிருந்து வேரோடு போய்விட்டது. இப்போது அவனிடம் இந்தப் பயம் இல்லை. கூடவே கொரோனாவால் எங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட நேர்ந்ததும் அந்த அனுபவங்களிலும் உரையாடல்களிலும் பத்ரியும் கூடவே இருப்பதாலும் நாங்கள் எல்லாரும் ஒன்றாகிவிட்ட உணர்வைத் தருகிறது.  திருமணத்துக்கு முன்பே நம்பிக்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டு நிகழும் மறுமணங்களால் இணையருக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய முரண்பாடுகள் உருவாகாது. மறுமணங்களின்போது முன்னைய திருமண பந்தத்தில் உள்ள பிள்ளைகளின் பாதுகாப்பற்ற நிலையின் உளவியலைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதே எனது அனுபவம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .