2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் யாரை காதலிக்கலாம்?

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல், திட்டம் போட்டு  ஆயத்தங்கள் செய்து, மனதில் கணக்குகள் போட்டு வருவதில்லை. அப்படி செய்தால் அதற்குப் பெயர் காதல் அல்ல.

காதல் தானாக இயற்கையாக உருவாவது. சில வேளைகளில் காதலிப்பவருக்கே தாம் ஒருவரைக் காதலிக்கிறோம் என்பது உடனே புரிவதில்லை. ஒருவருடன் பழகும் போது, கொஞ்சம் கொஞ்சமாக இந்த உணர்வு புரிபடத்தொடங்கும். அவரைப் பிரிந்து இருக்கும்போது அவரைக்காண வேண்டும் என்று மனம் தவிக்கும்.

அவரைக்கண்டவுடன் மனம் படபடக்கும். அவருடன் பழகும் போது மனம் மகிழ்ச்சியில் இறக்கை கட்டிப் பறக்கும், அவருடன் எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும் போல இருக்கும். சில வேளைகளில் மற்றவர்களுக்கு இதைப் பார்க்கும் போது ஏதோ இவர் மிகைப்படுத்தி தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறாரோ என்று தோன்றினாலும் காதல் வசப்பட்டவருக்கு அவை உண்மையான உணர்வுகளாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரியான உணர்வுகளை அனுபவித்தால் நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். இந்த உணர்வு வந்துவிட்டால் பெண்கள் நாம் தன்னிலை இழந்துவிடுகிறோமா என்று யோசிக்கவேண்டியுள்ளது. காதல் ஆள் பார்த்து, பின்னணிப் பார்த்து வருவதில்லை என்பதெல்லாம் ஏதோ சொல்லவும் கேட்கவும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் யதார்த்தத்தில் இது சாத்தியமா?

தனக்குப் பொருத்தமில்லாத ஆணைக் காதலித்துக் கொண்டு அவஸ்தைப்படுகின்ற பெண்களை நிறையவே சந்திக்கிறோம். “இதெல்லாம் உனக்கு முன்பே தெரியாதா” என்று நாம் எத்தனை தோழிகளைக் கேட்டிருப்போம். அல்லது எத்தனை பேர் நம்மையே கேட்டிருக்கிறார்கள். நீண்ட தூரப் பிரயாணத்தில் நடுவில் போய்க் கொண்டிருந்த பஸ் வண்டி பிரேக் டவுன் ஆனதுபோல் எத்தனையோ பேரின் காதல்கள் நடுவழியில் நிற்பதுண்டு. அப்படி நிற்பதில்கூட தவறில்லை. ஆனால் காதலித்தவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளவேண்டும், அதுதான் பெண்ணுக்கு ஒழுக்கம், மரியாதை என்று தூக்கிப் பிடித்து தனக்குப் பொருத்தமில்லாதவன் என்று தெரிந்த பெண்ணும் அவனையே மணந்து கொண்டு வாழ்நாள் எல்லாம் அவஸ்தைப்பட முடிவு செய்வதெல்லாம் சுத்த முட்டாள்தனம்.

திருமணம் சரியாக அமையவில்லை என்றால் விவாகரத்துப் பெறுவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறளவு நம் சமூகம் மாறிக் கொண்டு வருகிறது. ஆனால் காதலித்தவன் பொருத்தமானவனில்லை என்று தெரிந்து அவனை விட்டு விலகினால் அவளின் ஒழுக்கத்தைச் சந்தேகிப்பதெல்லாம் ரொம்பவே அதிகம்.

ஓர் ஆண் அழகாக, படித்தவனாக, உத்தியோகம் பார்க்கின்றவனாக, குடி போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதவனாக இருந்துவிட்டால் போதும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையாக ஓர் ஆண்  ஒரு பெண்ணை எப்படியாகப் பார்க்கிறான், ஒரு பெண்ணைப் பற்றிய அவனது புரிதல் என்ன? பெண்ணின் உரிமைகளையும் கௌரவங்களையும் மதிக்கிறானா? என்பதிலெல்லாம்தான் ஓர் ஆணின் தனித்துவம் மேலோங்கியிருக்க முடியுமே தவிர அவனது அழகினாலோ, உத்தியோகத்தினாலோ அல்ல.  என்ன பெரிய உத்தியோகம்? இன்று ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கின்ற பெண்கள் நிரம்பியிருக்கின்ற காலமிது. அழகு என்பது வெளியே தேடிக் காண்பது மட்டுமல்ல, உள்ளிருந்து, சிந்தனையிலிருந்து, தேடல்களிலிருந்து, செயல்களிலிருந்தும் வெளிப்படவேண்டும்.

பெண்கள் இனியும் கண்டேன் காதல், கண்மூடித்தனமான காதல் என்பதிலிருந்தெல்லாம் வீழ்ந்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக தனக்குப் பொருத்தமான தன்னை மதிக்கவும், உரிமைகளையும் மதிக்கவும் தனக்குரிய கௌரவத்தைத் தரவும் கூடிய ஆண்களை காதலிப்பது அவர்களது முழு வாழ்வுக்கும், நிம்மதிக்கும் நல்லது.

சிவமதி 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .