2021 ஜூலை 28, புதன்கிழமை

இலங்கைத் தமிழ் அகதிச் சிறுமி வைத்தியசாலையில்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நோய் ஒன்றுடன் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அங்கு பிறந்த சிறுமி ஒன்று போராடுகிறாள்.

குறித்த சிறுமியின் குடும்பத்தை மீளக் குடியமர்த்தும் நீண்ட கால வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு அவுஸி அரசாங்கத்துக்கு அகதிகளின் வழக்கறிஞர்கள் அழுத்தம் வழங்குகையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்மஸ் தீவிலுள்ள அகதிகள் தடுப்பு நிலையம் ஒன்றில் இருந்தே மூன்று வயதான தருணிகா முருகப்பன் எனும் சிறுமி நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். சிகிச்சையளிக்கப்படாத நியூமோனியாவுடம் தொடர்புபட்ட இரத்த தொற்று ஒன்றுக்கு உள்ளான இரண்டு வாரங்களுக்கு பின்னரே சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தருணிகாவுடன் வைத்தியசாலைக்கு அவரது தாயார் பிரியாவும் சென்றுள்ள நிலையில், தருணிகாவின் தந்தை நடேசலிங்கமும், மூத்த சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலுள்ள  தடுப்பு நிலையத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு தருணிகாவை எடுத்துச் செல்ல கிறிஸ்மஸ் தீவிலுள்ள மருத்துவப் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் மறுத்ததாக பிரியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் அனுமதிப்பதை எதிர்பார்க்கவில்லை என அந்நாட்டு வெளிநாட்டமைச்சர் மரிஸோ பெய்ன் தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பமானது, அவர்களின் வீட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு குடிவரவு அதிகாரிகளால் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திடீரென வெளியேற்றப்பட்டிருந்தது.

படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு 2012, 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கவும், பிரியாவும் அங்கு சந்தித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இக்குடும்பத்தை நாடுகடத்தும் முயற்சியானது மத்திய நீதிமன்ற நீதிபதியொருவரின் இடைக்காலத் தடையால் தகர்ந்து, இலங்கை வரவிருந்த இவர்களின் விமானம் டர்வினில் தரையிறங்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .