Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kanagaraj / 2016 ஜூலை 08 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, சிங்கராசா வழக்கு, மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மட்டக்களப்பின் நாவற்காட்டைச் சேர்ந்த நல்லரத்தினம் சிங்கராசா, 1993ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி, அதிகாலை 5 மணியளவில், அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வைத்து, பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது கிராமத்தில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப்பட்ட 150 பேரில், அப்போது 17 வயதான சிங்கராசாவும் ஒருவராவார்.
தனது 15ஆவது வயதில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிங்கராசா, அவர்களிடமிருந்து தப்பியோடி, தனது வீட்டில் வசித்து வந்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டதோடு, கோமாந்துறை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அன்று மாலையில், மட்டக்களப்புப்
பொலிஸின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு எதிரான பிரிவிடம் கையளிக்கப்பட்டு, மட்டக்களப்புச் சிறைச்சாலையிலுள்ள இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 17ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, அவர் தெரிவிக்கிறார்.
தண்ணீர்த் தாங்கிக்குள் அமுக்குதல், கண்களை இறுக்கிக் கட்டுதல், தலைகீழாகத் தொங்க விடுதல் போன்றன, அவரால் குறிப்பிடப்பட்ட சித்திரவதைகளாகும். சிங்களம் தெரியாத நிலையில், தனக்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான வசதிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் அவர், விசாரணைகளின் பின்னர், டிசெம்பர் 11ஆம் திகதி, சிங்களப் படிவமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டதாகவும், தனக்கு மொழி தெரியாததன் காரணமாகக் கையெழுத்திட மறுக்க, கட்டாயப்படுத்தி, கைவிரலடையாளம் பதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
1994ஆம் ஆண்டு செப்டெம்பரில், '1989ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், மூதூரில் வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் ஆயுதப் பயிற்சி எடுத்தமை', 'அரந்தாவலவில் இராணுவ வீரர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தமை', 'அரசாங்கத்தைக் கவிழ்க்க முனைந்தமை', 'யாழ். கோட்டை, பலாலி, காங்கேசன்துறை, ஆனையிறவு ஆகிய இடங்களில் நான்கு இராணுவ முகாம்களைத் தாக்கியமை' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், அவரும் இன்னும் சிலரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர். பின்னர், 1995ஆம் ஆண்டு செப்டெம்பரில், 50 ஆண்டுகளுக்குச் சிறை வைக்கப்பட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினால், 1999ஆம் ஆண்டு, அவரது சிறை, 35 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. எனினும் தன்னை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக, விசேட விடுப்பை அவர் கோரிய போதிலும், 2000ஆம் ஆண்டு, அந்தக் கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் அவர் முறையிட்டார். அது தொடர்பாக அவர் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகள், அதற்கான அரசாங்கத்தின் பதில்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, விடுதலை அல்லது மீள வழக்குத் தாக்கல் என்ற அடிப்படையில் அவருக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென, மனித உரிமைகள் செயற்குழு தெரிவித்தது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, அதன் கட்டாயப்படுத்தப்படாத படிமுறைக்கும் உடன்பட்ட நாடு என்பதன் அடிப்படையில், இலங்கைக்கு இந்தக் கடப்பாடு இருப்பதாக, அது அறிவித்தது. இது தொடர்பிலேயே, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago