Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 22 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, ஏழு பேர் அடங்கிய விசேட ஜூரிகள் சபையை, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) நியமித்தது.
ஜூரிகளை நியமிக்கும் செயற்பாடுகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 11:15க்கு ஆரம்பமானது. இதன்போதே, 7 பேரடங்கிய விசேட ஜூரிகள் சபை நியமிக்கப்பட்டது. அதில் ஆறு ஜூரிகள் பெண்களாவர், ஜூரியின் தலைவராக, எம்.பி.பி.திலகசிறி நியமிக்கப்பட்டார். அனைவரும் சிங்களவர்களாவர். இவர்கள் அனைவரும் பட்டதாரிகளாவர்.
குறித்த வழக்கை, சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, இந்த கொலைவழக்கின் பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் மூவரும் கோரியிருந்தனர். இந்தக் கோரிக்கைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்தே, ஜூரி சபை நேற்று நியமக்கப்பட்டது. அதன் பின்னர் பகல் போசனத்துக்காக நீதமன்றத்தின் அமர்வு, 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவ்வமர்வு, பகல் 1 மணிக்கு மீண்டும் ஆரம்பமானது.
இந்த வழக்கை அவதானிப்பதற்காக சட்டத்தரணிகள் பலரும் அம்மன்றில் குழுமியிருந்தனர். சாட்சியாளர்களும் அவர்களின் உறவினர்களும் மன்றில் நிரம்பியிருந்தமையால், இடநெருக்கடியும் ஏற்பட்டிருந்ததனை அவதானிக்கமுடிந்தது.
பகல்போசனத்துக்கு பின்னர் நீதிமன்றம் கூடியதையடுத்து. ஜூரிகள் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டதுடன், பிரதிவாதிகள் தாங்கள் நிரபராதிகள் எனத் தெரிவித்தனர்.
இந்தக் கொலை வழக்கின் சந்தேகநபராக இருந்து, அரச தரப்பு சாட்சியாளராக மாறிய முதலாவது சாட்சியான சம்பத் பிருதிவிராஜ் உட்பட 67 சாட்சியங்கள் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் சாட்சிகள் பல, நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாய் இருக்கவில்லை.
வழக்கு தொடர்பான விவரங்களை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, ஜூரி சபையின் முன்னிலையில், பிற்பகல் 1 மணி முதல் 2:35 மணி வரை விவரித்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அறுவரில், நான்கு பேர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மூன்று கடற்படை அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் இதில் அடங்குகிறார். ஏனைய இருவரும், எல்.ரீ.ரீ.ஈ என்ற பயங்கரவாத அமைப்பு பிளவடைந்ததன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்தவர்களாவர். பழனிச்சாமி சுரேஷ், சிவகாந்தன் விவேகானந்தன் ஆகியோரே அந்த நபர்களாவர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் சாரதியாக இருந்த நபர், இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராவார். அவர், அரச தரப்புச் சாட்சியாளராக மாறியதன் பின்னர், தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
நாராஹேன்பிட்டியில் வைத்து, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 8.15 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோத்தில், ரவிராஜ் எம்.பியும் பொலிஸ் அதிகாரியொருவரும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்ட அஞ்சலோ ரோய் என்பவர், பொலிஸ் அவசர தொடர்பு இலக்கமான
119 ஐ அழைத்து, அறிவித்தார். இவரைப் போல, அப்பகுதியில் இருந்தவர்களே சாட்சியமளிக்கவுள்ளனர்” என, விசேட ஜூரிகள் சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
“குற்றப்புல னாய்வுப்பிரிவினரால், தனியாக விசாரிப்பதில் ஏற்பட்ட சிரமங்களையடுத்து, வழக்குத் தொடர்பாக விசாரிப்பதற்கு, பிரித்தானியாவிருந்து ஸ்கொட்லாண்யாட் பொலிஸார் வருகை தந்திருந்தனர். எனினும், தங்களுடைய அறிக்கையின் பின்னர், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கக் கூடாது என அவர்கள் கோரியிருந்தனர். இதனையடுத்தே, அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்” என்றும் விசேட ஜூரிகளின் கவனத்துக்கு, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கொண்டுவந்தார்.
“சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு முந்தைய தினமான, நவம்பர் 9ஆம் திகதி, கருணா தரப்பைச் சேர்ந்த இருவர், ரவிராஜ் எம்.பியை மருதானை டெக்னிகல் சந்தியில் வைத்து, படுகொலை செய்ய முயன்றபோதும், முடியாமற் போனது. இதனையடுத்தே, அடுத்தநாள் அவர் படுகொலை செய்யப்பபட்டார். இந்தக் கொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ரி- 56 ரகத் துப்பாக்கி, கிரிதலே இராணுவ முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிவிய வந்துள்ளது. இது, கருணா தரப்பினராலேயே கொண்டுவரப்பட்டது என சாட்சியமளிக்கப்பட்டுள்ளது” என்றும் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
சுமார் ஒன்றரை மணிநேர, விவரிப்புக்குப் பின்னர், சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை ஜூரிகள் சபையால் இன்று புதன்கிழமை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago