2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் முறையீடு

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாரூக் தாஜுதீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக்கோரியும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவினால்,
 நீதிமன்றத்தில், நேற்று (11) மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

வழமைக்கு மாறாக நள்ளிரவு வரை வழக்கு நடத்தப்படுவதற்குத் தீர்மானித்திருந்ததாக நீதிபதி கூறியிருந்தார் என, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால், வழக்கு விசாரணையின் போது இடம்பெற்ற சில முக்கிய விடயங்கள், கூர்ந்து அவதானிக்காமல் விடப்பட்டதாவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், முக்கியமான விடயங்கள் தொடர்பிலான சட்ட விளக்கங்கள் ஜூரிகள் சபைக்கு நீதிபதியினால் விளக்கமளிக்கப்படவில்லை. தீர்ப்பில் சில விடயங்கள் விடுபட்டுள்ளது. ஆகையால், இந்த வழக்கை புதிதாக எடுத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.  

சிங்கள ஜூரிகள் சபையின் முன்னால், 21 நாட்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், கடற்படை அதிகாரிகள் மூவர் உட்பட வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகள் ஐவரும், ஜூரிகளின் தீர்மானத்துக்கு அமைய, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பெப்ரவரி 24ஆம் திகதியன்று அதிகாலை விடுவிக்கப்பட்டனர்.  

முறைப்பாட்டாளரான சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன், 2ஆம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான ரசிக்க பாலசூரிய மற்றும் யுரான் லியனகேவும் 3,4ஆவது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் ஆஜராகியிருந்தனர்.  

2006.11.10அன்று, நாரஹேன்பிட்டியிலுள்ள மாதா வீதியிலிருந்து பேஸ்லைன் வீதிக்கு செல்ல முயன்ற ரவிராஜ் எம்.பியின் ஜீப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அவரும் அருடைய மெய்ப்பாதுகாவலரான லக்ஷ்மன் என்பரும் கொல்லப்பட்டனர்.  

வழக்கின் 1ஆவது சந்தேகநபராக இருந்த மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ், அரசதரப்பு சாட்சியாளராக மாறியிருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X