2025 மே 05, திங்கட்கிழமை

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு: அநுரவுக்கு தொடர்ந்தும் மறியல்

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதாகியுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியலை, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (30) உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில், நேற்று (30) எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போது, மாலபேயிலுள்ள சைட்டம் (மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவகம்) நிறுவகத்திலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, கொலை நடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணைகள், தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனங்கள் தொடர்பான விசாரணைகள், அவரின் வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் என்பன இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைக்கு காலம் தேவைப்படுவதாகவும் அறிவித்தார்.

சந்தேகநபர், ஒரு வருடம் வரையான காலப்பகுதியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் எவ்வளவு காலத்தில் விசாரணைகள் முடிவடையும் என்றும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மன்றில் கேள்வியெழுப்பினார்.

இது சாதாரண வழக்கு போலில்லை என்றும், மீண்டும் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, வேறோர் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதால், அதற்கு மேலதிக காலம் தேவைப்படுவதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க மன்றில் அறிவித்தார். இதனையடுத்தே, நீதவானினால் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X