2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மன்மதன் உயிர்த்தெழுந்தார்: பார்வையாளர் மரணமானார்

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்

காமன் கூத்தில், மன்மதன் வேடமிட்டவர் உயிர்த்தெழுந்துள்ள நிலையில், அக்கூத்தைப் பார்வையிடச் சென்றவர்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், இளைஞர் ஒருவர் இன்னும் சிகிச்சைபெற்று வருகின்ற சம்பவமொன்று டயகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 17 வயதான கணேஷன் சுரேன் என்ற மாணவனே, கூத்து ஆடப்பட்டு 54 நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார். இளைஞன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இதேவேளை, மாணவன் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமானவர் என்ற சந்தேகத்தில் கைதானவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பதுளை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டயகம கிழக்கு தோட்ட முதலாம் பிரிவில், கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று காமன் கூத்து இடம்பெற்றுள்ளது. விடிவிடிய ஆடியதன் பின்னர் மன்மதன் அழிக்கும் கட்டம் வந்துள்ளது.

காமன் பண்டிகை திட்டில் மன்மதனுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில், மிலாறு (தேயிலையிலைச் செடிகளில் காயந்தவை), விறகுகள் அடுக்கப்பட்டு, மன்மதன்போல கீறப்பட்ட படமொன்று அதனுள்ளே ஏற்கெனவே, தயாராக வைக்கப்பட்டிருக்க, மன்மதனை அழிக்கும் அக்கட்டத்தில் அந்தப்பந்தலுக்கு தீ மூட்டப்பட்டது.

இந்நிலையில், அந்த பந்தலுக்குப் பெற்றோல் கலந்த மண்ணெண்ணெயை ஒருவர் ஊற்றியுள்ளார். அந்த மண்ணெண்ணெய், பந்தலுக்கு அருகில், தீ மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்த இளைஞர்களில் இருவர் மீது பட்டுள்ளது.

அவ்விருவரும் கடும் தீக் காயங்களுக்கு உள்ளானாகினர், அவ்விருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிசிச்சைப் பெற்று வந்தனர். அதிலோர் இளைஞனே 8ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த மாணவன், தாயும் தந்தையும் இழந்த நிலையில், மாமனாரின் பாதுகாப்பில் வளர்ந்துவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவ்விளைஞனின் சடலம், உறவினர்களிடம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, காமன் கூத்து நிறைவடைந்ததன் மூன்று நாட்களுக்கு பின்னர் உயிர்யெழுப்புதல் இடம்பெறும், இந்தத் தோட்டத்திலும், அது இடம்பெற்றது. அதன்போது மன்மதனுக்காக வேடமிட்டிருந்தவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .