George / 2016 நவம்பர் 14 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து, தன்னுடைய மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்துள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
நிர்வாணக்கோலத்தில் மயக்கமடைந்திருந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அக்குடும்பத்தின் தலைவன் ராஜலக்ஷ்மனன் (வயது 35) என்பவர், மயக்கம் தெளிந்ததன் பின்னர், உப்புவெளிபொலிஸ் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே அழைத்துவரப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோரச் சம்பவத்தினால், உயிரிழந்த மூவரின் சடலங்களும் நேற்றுத் திங்கட்கிழமை மாலையே கையளிக்கப்பட்டுள்ளன. இறுதி கிரியைகள் யாவும் இன்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “திருகோணமலை, புளியங்குளம் பகுதியில் உள்ள கோவிலொன்றில் நான், பூசாரி வேலைச் செய்துக் கொண்டிருந்தேன். புதையல் கிடைப்பது போல எனக்கு, கனவு தென்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி (போயா) தினத்துக்கு முதல் நாளன்றே புதையல் கனவு வரும்.
கல்லுமலை பகுதியிலேயே அந்தப் புதையல் இருப்பதாகவும், அந்தப் புதையல் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பிக்கும் வகையில், கல்லுமலையில் உள்ள கல்லொன்றில், மனித முகத்திலான வடிவமொன்று இருப்பதுடன், அதில் நாக்கொன்று தொங்கும் என்றும் அக்கல்லின் கீழே புதையல் இருக்கிறது எனவும் கனவில் தென்பட்டது.
அங்கிருந்து ஒருநாள் வீட்டுக்கு வந்த நான், கல்லுமலைக்குச் சென்று கல்லைத் தேடினேன். அக்கல்லில், என் கனவில் சொல்லப்பட்ட அடையாளங்கள் இருந்தன. எனக்குத் தெரிந்த அந்த அடையாளம், வேறு எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த அடையாளத்தை கறுப்பு நிறத்தினால் அழித்துவிட்டேன்.
புதையல் விவகாரத்தை மனைவிக்கு தெரிவித்தேன். பலிகொடுக்கவேண்டும் என்றும் கூறினேன். அதற்கு அவள் மறுத்துவிட்டாள். எனினும், என்னுடைய பூஜைகளின் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கையிருந்தது.
அதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட நான், மனைவியை பூஜை வழிபாடுகளில் ஈடுபடுத்தினேன். ஒவ்வொரு போயா தினத்துக்கு முதல்நாள் இரவும், போயா தினத்தன்றும் வீட்டுக்குள்ளேயே பூஜைகளை செய்வேன்.
சம்பவ தினத்துக்கு அடுத்தநாளான திங்கட்கிழமை, போயா தினம் என்பதனால், முதல் நாள் இரவு பூஜை செய்தேன், காலையில் எழுந்தவுடன் மகள்மார் இருவரையும் மஞ்சள் நீரால் நீராடச்செய்தேன். வீட்டுக்கு முன்பாக கோலம் போட்டு, சூரிய பூஜையையும் செய்தேன். அதன் பின்னரே, வழமையாக செல்லும் அவளுடைய (மனைவியின்) அக்காவின் வீட்டுக்கு அழைத்துச்சென்றேன்.
அங்கு வைத்தும், பூஜை செய்தேன்... பூஜைகளில் மூவரும் லயித்திருந்த வேளையில், மூவரையும் நிர்வாணப்படுத்தினேன். என்னுடைய இடுப்பில் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த வாளால், சிறிய மகளின் கைகளை வெட்டினேன் (சந்தியா -வயது 8), அந்த இரத்தத்தை அவ்வீட்டின் நான்கு மூலைகளிலும் தோய்த்துவிட்டு வருவதற்குள், என் மனைவி மயக்கம் தெளிந்து, என்னுடன் சண்டையிட்டாள்.
என்ன செய்வதென்றே தெரியாமல், மூவரையும் வெட்டிச் சாய்த்துவிட்டேன். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), தன்னுடைய கணவனான ராஜலஷ்மனன், புதையல் பைத்தியத்துடன் திரிகின்றான். தன்னுடைய பிள்ளைகளுக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று தான் அஞ்சுவதாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக, நித்தியாவின் அக்கா, பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, முக்கொலைச் சந்தேக நபரான ராஜலஷ்மனன், மேசன் வேலைச் செய்பவர் என்றும் கடந்த 7 மாதங்களாகவே எவ்வித தொழில்களுக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து, கூடுதல் நேரமும் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை, கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களிலிருந்து, அதிகளவான இரத்தம் வெளியேறியமையால், இந்த மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 32 வயதான ராஜலக்ஷ்மனன் நித்தியா, மூன்று மாத கர்ப்பிணி என்றும் அந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, குறித்த சந்தேகநபரான 35 வயதான ராஜலக்ஷ்மனன், மற்றுமொரு போயா தினத்தன்று, செல்வநாயகபுரம் கோவிலில் நிர்வாணக்கோலத்தில் நின்றுக்கொண்டிருந்தார். என்றும் ஊர்மக்கள் அவரைப் பிடித்து, அடித்து தோய்த்து, ஆடைகளை உடுத்தி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், “கடந்த மாதம் போயா தினத்தன்று மயானத்துக்குச் சென்று, மனித மண்டையோட்டை வைத்து வழிப்பட்டும் உள்ளார்” என்றும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க, ராஜலக்ஷ்மனின் தந்தை, அவரது மனைவியை அடித்துக்கொன்றதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில். இந்த முக்கொலை தொடர்பில், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago