(சுபுன் டயஸ், குசால் சமத்)
வாதுவை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தின் வாதுவை மொரொன்குடுவ வீதியில் இரும்புப்பொருட் கடையொன்றின் ஊழியரான பெண்ணொருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இந்திராணி அத்தசூரிய (44) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவர் கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை, கடைக்குள் நுழைந்த நபர்கள் அவரின் முகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அவர், பாணந்துறை வைத்தியசாலைக்கு அயலவர்களால் அழைத்துச் செல்லப்பட்டபோதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சுமார் இரு மணி நேரம் பதற்றம் நிலவியது. சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்வதற்கு ஏற்கெனவே பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கிராமவாசிகளிடம் பொலிஸார் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இப்பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவ்வழக்கில் இப்பெண்ணும் ஒரு சாட்சியாக இருந்தார். அவரின் கணவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு இப்பெண்ணின் கொலையுடனும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.