2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

68 வயதான சட்டத்தரணி படுகொலை விவகாரம்; 21 வயது காதலி கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதுருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டத்தரணியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் 21 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தில் கொல்லப்பட்ட சட்டத்தரணி 45 வயதுடையவர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் அவருடைய உண்மையான வயது 68 என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யுவதி, அவருடைய காதலி என்றும் கொலைச் சம்பவத்தின் போது குறித்த யுவதியும் அந்த வீட்டில் இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வின்சன் ஜயவர்தன (வயது 68) என்ற மேற்படி சட்டத்தரணி, மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவருக்கு 29 மற்றும் 25 வயதுகளில் இரு மகன்மார்கள் உள்ளனர்.

தனது மனைவியைவிட்டுப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ள இவர், மாத்தறையில் உள்ள அவரது வீட்டை விற்பனை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அத்துருகிரிய பிரதேசத்தில் வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளதுடன் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியொருவரையும் அங்கு அழைத்துவந்து இருவரும் அங்கு வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த யுவதியுடன் இவர் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார் என்றும் இவர்களுக்கிடையிலான சண்டையின் போதே, நேற்று முன்தினம் இரவு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுத்தியல் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், மேற்படி யுவதியின் வாக்குமூலத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த படுகொலைச் சம்பவத்துக்கு மேற்படி யுவதியே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு உதவியாக மற்றுமொரு நபர் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சட்டத்தரணிக்கும் மேற்படி யுவதிக்கும் இடையிலான சண்டை மற்றும் கோபமே இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடுவல மஜிஸ்திரேட் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். கொழும்பு நீதிமன்ற மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .