2025 மே 16, வெள்ளிக்கிழமை

கேப்பாபுலவு: பிரதமருடன் இன்று பேச்சு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

முல்லைதீவு, கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு கிராம மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, இப்பேச்சுவார்த்தையின் போது, காணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, நாடாளுமன்றில் விவாதத்துக்கு, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று சமர்ப்பித்தார்.

அதன்போது, பிலவுக்குடியிருப்பு கிராமத்தின் காணி விடுவிப்பு விடயத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை படையினர் மீறிவிட்டதாக, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி சிவமோகன், சிறிநேசன், காதர் மஸ்தான் ஆகியோர் கூட்டாக குற்றஞ்சாட்டினர்.

அத்துடன், காணாமற் போனோர் விவகாரம் தொடர்பில், அவர்களது உறவினர்கள் உள்ளடங்கிய குழுவினர், அலரி மாளிகையில் நாளை (இன்று) பிரதமரைச் சந்திக்கவுள்ளனர். அதன் பின்னர், இந்த காணிப்பிரச்சினைக் குறித்து பிரதமரிடம் பேச, நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டனர். “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,  எழுத்துமூலம் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உறுதிமொழி, தற்போது மீறப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்களின் போராட்டத்துக்கு நாமும் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம். ஆகவே, கேப்பாபுலவு குடியிருப்பு நிலங்களை, அதன் பூர்வீகக் குடியிருப்பாளர்களுக்கு திரும்ப ஒப்படைப்பதற்கு, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். இதன்போது பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இது தொடர்பிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .