2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘நெத்தலி குஞ்சுகளே சிக்குகின்றன’

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை வலைக்குள் நெத்தலி மீன்

குஞ்சுகளே சிக்குகின்றன. சுறாக்கள், சுதந்திரமாகத் திரிகின்றன” என்று, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டினார். 

இதே​வேளை, “ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, றக்பி வீரர் வசீம் தாஜுதீன் உள்ளிட்டவர்களின் படுகொலை வழக்குகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயலுகின்றது” என்றும் கூறினார். 

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

 “ஊழல், மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று என்ன நடக்கின்றது? மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். 

இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழுவானது முக்கியப் பிரமுகர்களுக்கு எதிராக உரிய வகையில் விசாரணை நடத்தாது என்பது, 1994ஆம் ஆண்டு முதல் எழுதப்படாத சட்டமாக இருந்துவந்தது. சாதாரண அரச அதிகாரிகளே குறிவைக்கப்பட்டு அவர்களிடம் அலசி ஆராயப்படும். பாரிய மோசடிக்காரர்கள் தப்பிவிடுவார்கள். 

ஆனால், இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க பதவியேற்றபின்னர் நிலைமை மாறத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் நால்வருக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணைசெய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  

முன்னாள் எம்.பியொருவரையும் விசாரணை வலைக்குள் விழச்செய்தார். இவர் எம்.பியாக இருந்தபோதிலும் பலமிக்க வெளிவிவகார அமைச்சர் ஒருவரைப்போலவே செயற்பட்டார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்,  கடற்படைத்தளபதிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்தார். தற்போதைய அரசிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராகவும் அவர் விசாரணைகளை முடித்திருந்தார். 

இவ்வாறானதொரு நிலையில் அவர் பதவி விலகினார். அவர் ஏன் பதவி விலகினார் என்பதற்குரிய காரணத்தை பிரதமர் இன்னுமே சபைக்கு அறிவிக்கவில்லை. சுறாமீன்களுக்கும் வலைவிரித்ததன் காரணமாக, கால்பந்தை போல டில்ருக்சி விரட்டப்பட்டுள்ளார். 

புதிதாக ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதிலும் ஒரு வழக்கு மாத்திரமே தொடரப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அரசியல் நோக்கங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.  

அதேவேளை, முக்கிய கொலைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். லசந்த, தாஜுதீன் உள்ளிட்டவர்களின் சர்ச்சைக்குரிய படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் உண்மையான நோக்கமல்ல. கொலையாளிகளுக்காக அவை மூடிமறைக்கப்பட்டுள்ளன’ என்றார். 

மேலும், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள போதிலும், அவருக்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் ஏன் வழங்கு தொடுக்கப்படவில்லை” என்றும் அவர் கேள்வியெழுப்பினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X