2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘இந்திய அணுசக்தி நிலையங்களை இலங்கையால் அவதானிக்கலாம்’

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“பிற அரசுரிமை அணுசக்தி நிலையங்களை அவதானிக்க எந்தவோர் அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை. எனினும், இந்தியாவில், இலங்கைக்கு அண்மித்ததாக இருக்கின்ற அணுசக்தி நிலையங்களையும் அதன் செயற்பாடுகளையும், இலங்கையால் அவதானிக்க முடியும்” என, மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றுத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், சந்திம கமகே
எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்களின் செயற்பாடுகளை எம்மால் அவதானிக்க முடியும். அதற்கான இயலுமை எமக்குள்ளது. பிற அரசுரிமை அணுசக்தி நிலையங்களை அவதானிக்க எந்தவோர் அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை. எனினும், இந்தியா- சர்வதேச அணுமின் பாதுகாப்பு உடன்படிக்கை அடிப்படையில், சர்வதேச அணுமின் சக்தி முகவருக்கு அவற்றைப் பரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது.

“இலங்கையானது சர்வதேச அணுமின் சக்தி முகவர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதால், இலங்கையானது சர்வதேச அணுசக்தி அதிகார முகவர் மூலமாக தகுந்த விபரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

“இலங்கை மக்களின் பாதுகாப்புக் கருதி வேறு அரச ஆதாரம் அல்லது கதிர்வீச்சு விபத்து குறித்து அல்லது கண்டறிவதற்கும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கொழும்பு, புத்தளம், மன்னார், நெடுந்தீவு, காங்கேசன்துறை, திருகோணமலை, காலி மற்றும் கண்டி முதலான 8 இடங்களில் தன்னியக்க கதிர்வீச்சு அளவிடல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.

“இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணுசக்தி நிலையத்தால், இலங்கைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்ற கருத்து உள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் எனும் பகுதியில்தான், எமக்கு அண்மித்த அணுசக்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அந்த நிலையம் இப்போது செயற்படுகின்றது. மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. கற்பிட்டியிலிருந்து பார்த்தால் 220 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. எம்மிடமுள்ள தகவல்களினடிப்படையில் பார்க்கும்போது, 100 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அணுசக்தி நிலையத்தில் அனர்த்தமொன்று ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுக்ககூடிய தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து குறுக்குக் கேள்வியொன்றை எழுப்பிய சந்திம கமகே எம்.பி., “இலங்கையில் அணுசக்தி நிலையமொன்றை அமைக்க எவ்வளவு காலம் எடுக்கும்?” என்று கேட்டார்.

“எமது நீண்டகால திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத் திட்டமாக அணுசக்தி நிலையத் திட்டம் நாம் உள்ளடக்கியுள்ளோம். ஆனால், இன்னும் எமது நீண்டகால திட்டத்திலிருந்து அதைக் கைவிடவில்லை. இன்று நாட்டில் இருக்கும் சிக்கலான விடயங்கள் அதுபோல காணி தொடர்பில் காணப்படும் தட்டுப்பாடு மற்றும் சூழல் பாதுகாப்புடனான காற்றலை மற்றும் சூரிய சக்தி தொடர்பில் எம்மால் அவதானம் செலுத்தப்படுகிறது. இதனால், அணுசக்தி நிலையமொன்றை அமைக்க நாம் நிலையான தீர்மானமொன்றை எடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் அணுசக்தி நிலையமொன்றை நிறுவவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உரிய முறைகளுக்கு அமைய அதற்காக 15, 20 வருடங்கள் எடுக்கும். அதனால், அடிப்படை விடயங்களைச் செய்து அதங்குத் தயாராக உள்ளோம். ஆனால், கொள்கைக்கு அமைய நிலையான திட்டத்துக்குச் செல்ல வேண்டும் என உத்தரவு கிடைக்கும்வரை, அதற்கு செல்லும் இயலுமை எமக்கு இல்லை” என்றார்.

மீண்டும் குறுக்கிட்ட சந்திம கமகே எம்.பி.,

“அணுசக்தி கதிர்வீச்சு விபத்து குறித்து அல்லது  கண்டறிவதற்கு தற்போது தன்னியக்க கதிர்வீச்சு அளவிடல் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு மேலதிகமாக வேறு இடங்களிலும் இதைப் பொருத்தினால் நல்லது என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர்,

“கூடங்குளம் அணுசக்தி நிலையம்தான் தற்போது எமக்கு (இலங்கைக்கு) அண்மையில் வடக்கு, மேற்கு மற்றம் திருகோணமலை கடற்பகுதி குறித்து மட்டுமே நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இந்நிலையில், மேலும் கண்காணிப்பு மத்திய நிலையங்கள் நிறுவ முடியுமா என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கின்றோம்?” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .