2024 மே 22, புதன்கிழமை

‘கல்மதுரையை கைவிடவில்லை’

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

அக்கரபத்தனை, டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவில் வசிக்கும் லயன் குடியிருப்பாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், கல்மதுரையை கைவிடவில்லை என்றும் தெரிவித்தார். 

கல்மதுரை தோட்ட மக்கள் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் நேற்று (23) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,  

“அக்கரபத்தனை பிரதேசத்தில் டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவில் வசிக்கும் லயன் குடியிருப்பாளர்களின் பிரச்சினை தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி.  

கல்மதுரை தோட்டத்தில் 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது எனது பணிப்பின் பேரில் அமைச்சின் அதிகாரிகள் அங்கு சென்று நேரடி ஆய்வு நடத்தி எனக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தில் எனது அமைச்சுக்கு வீடமைப்புத் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

ஒவ்வொன்றும் தலா ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய 10 வீடுகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.  

அதுதவிர கல்மதுரை தோட்டத்தில் மாத்திரமல்ல மலையக மக்கள் வாழும் பல தோட்டங்களிலும் சுமார் 200 வருடங்கள் பழைமையான லயன் குடியிருப்புக்களே காணப்படுகின்றன. அவை வாழ்க்கை நடத்துவதற்கு உகந்ததல்ல.  

மழைக் காலங்களில் இம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான், இந்த மக்களை லயன் வாழ்க்கை முறையில் இருந்து மீட்டு தனி வீடுகளில் குடியமர்த்தவென எனது அமைச்சு முறையான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனவே விரைவில் இம்மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்த்து வைக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .