2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘பணிஸின் விலையை விட நீர் கட்டணம் குறைவு’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தண்ணீர்க் கட்டணம், பணிஸ் ஒன்றின் விலையை விடவும் குறைவானது, சிகரெட் ஒன்றின் விலையை விடவும் குறைவானது என்று, நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,   

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 3 வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளவேண்டிய தண்ணீர்க் கட்டணத் திருத்தமானது. இறுதியாக 2012ஆம் ஆண்டே திருத்தப்பட்டது. 4 வருடங்களின் பின்னரே இம்முறை திருத்தப்பட்டது.   

அதுவும் 30 சதவீதமான அதிகரிப்புக்கான திருத்தமே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அதாவது, 30 சதவீதம் என்பதை பெரிதாகப் படம்பிடித்து காண்பித்தமையினால் தான், எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தண்ணீர்க் கட்டண அதிகரிப்பை இடைநிறுத்தினார்.  

எனினும், தண்ணீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தேனீர் கோப்பையொன்றின் கட்டணத்தை 5 ரூபாயினால் அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  

5 பேரைகொண்ட குடும்பமொன்று, மாதமொன்றுக்கு 15 கனமீற்றர் தண்ணீரை செலவளிக்கின்றது. அதற்காக தற்போது 310 ரூபாயே அறவிடப்படுகின்றது. அத்தொகையை 540 ரூபாயாகவே அதிகரிப்பதற்கு யோசித்தோம். அதாவது, நாளொன்றுக்கு 18 ரூபாவையே அதிகரிக்கயோசித்தோம். எனினும், ஒரு கோப்பை தேனீருக்கு 5 ரூபாயை அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கப்பட்டது.  

ஒரு கனமீற்றர் தண்ணீரில் ஆயிரக்கணக்கான கோப்பை தேனீர் தயாரிக்கலாம் என்பதனை பலரும் மறந்துவிட்டனர். ஒரு கனமீற்றர் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு 48 ரூபாய் செலவாகின்றது. அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வீட்டுக்கே கொண்டுவந்து சேர்ப்பதற்குத்தான் 540 ரூபாயைக் கேட்கின்றோம்.  

நாட்டிலேயே 45 சதவீதமானவர்களுக்கு மட்டுமே குழாய்கள் ஊடாக தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது. அதிலிருந்து பெறுகின்ற வருமானத்தின் ஊடாகவே மீதமிருக்கின்ற 55 சதவீதமானோருக்கு தண்ணீர் பெற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது.  

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வீடொன்றுக்கு வழங்குவதற்கு ஆகக்குறைந்தது 5 இலட்சம் முதல் 6 இலட்சம் வரையிலும் செலவாகின்றது. அவ்வாறான செலவுகளுடனேயே நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை இயங்குகின்றது. இவ்வாறான நிலைமை ஏற்படுமாயின், திறைசேரியே கைக்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .