2025 மே 15, வியாழக்கிழமை

‘மஹிந்த உயிர் ஊசல் ஆடுகிறது’

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டமையால் அவருடைய உயிருக்கு கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி, நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.  இதனையடுத்து, ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பரஸ்பரம் கருத்துகளை தெரிவித்தமையால், சபை நேற்று (04) காலைவேளையில் சற்று சூடாகியிருந்தது. 

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக்காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான தினேஷ் குணவர்தன, 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதற்கு முன்னர், பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குழுவிலிருந்து 42 பேர் விலக்களிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும், நேற்றிரவே (புதன்கிழமை இரவு) கொழும்புக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். மே தினத்துக்கு பின்னரே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 பாதுகாப்பு விவகாரத்தில் காலதாமதம் ஏற்படுமாயின், அவரின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றார். 

மே தினத்துக்கு பின்னர் அச்சம் ஏற்பட்டால், அச்சமிருந்தால், அதற்காக பாதுகாப்பை குறைப்பது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே நாம் பார்க்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

விசேட அதிரடிப்படைதான் நல்லது 

இதன்போது குறுக்கிட்ட, அமைச்சரும் சபைமுதல்வருமான லக்மன் கிரியெல்ல, பாதுகாப்பு விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவருவேன். பாதுகாப்புக்கு, அதிரடிப் படைதான் சிறந்தது என்றார். 

இலட்சம் அச்சுறுத்தல்கள் உள்ளன 

ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான டலஸ் அழகபெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சுமந்திரனுக்கு புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சுமந்திரனுக்கே புலிகளால் அச்சுறுத்தல் என்றால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலட்சோப இலட்சம் அச்சுறுத்தல்கள் உள்ளன. 

அரசியல் அழுத்தம் நியாயமானது அல்ல 

இதனிடையே எழுந்த, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க, பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக கூறப்படும் நபர், ஒரு அரசியல் குழுவைச்சேர்ந்தவர். அச்சுறுத்தல் இருக்கின்றதா? இல்லையா என்பது தொடர்பில், தீர்மானிப்பதற்கு நிறுவனங்கள் இருக்கின்றன. 

எனினும், மே தினத்துக்கு பின்னர் இவ்வாறு பாதுகாப்பு குறைக்கப்படுமாயின், அதாவது அரசியல் ரீதியிலான முடிவு எடுக்கப்படுமாயின் அது தவறானதாகும். அரசியல் ரீதியில் அவ்வாறானதொரு அழுத்தத்தை பிரயோகிப்பது சாதாரணமானது அல்ல என்றார். 

 சபாநாயகர் பதில் 

இருதரப்பு வாதங்கள் மற்றும் பிரதிவாதங்களுக்கு செவிமடுத்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .