2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

SAITM விவகாரத்தால் சபையில் சலசலப்பு

Thipaan   / 2016 நவம்பர் 23 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை, அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டும் என்றும் இந்தக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பிரச்சினை, தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை (23) இடம்பெற்ற உயர்கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக, அதில் கல்வி பயிலும் மாணவர்களை கைவிட்டுவிட முடியாது. இதற்கு என்னதான் தீர்வு? நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இதற்கு ஒரு தீர்வை வழங்குவோம். அதற்காக, அனைவரும் ஒன்றிணைந்து, கடையை (கல்லூரியை) மூடிவிட்டுச் செல்ல முடியாது” என்றார்.  

இதன்போது குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, “ஒத்துழைப்பு வழங்குவது ஒரு புறமிருக்கட்டும். நீங்கள் கடையை மூடுங்கள். இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றி, அரச பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுப்பதே, இதற்கான சிறந்த தீர்வாகும். எனவே, கடையை மூடிவிட்டு மாணவர்கள் பற்றி மாத்திரம் நாம் கதைப்போம்” என்றார்.  

இதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “தற்போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ள எமது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, வருடமொன்றுக்கு 7 பில்லியன் ‌ரூபாயை நாம் செலவு செய்கின்றோம். ஏன் இவ்வாறு நடக்கிறது? அங்கு மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அவர்கள் கல்வி கற்கின்றனர். எமது நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படுமேயானால், வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும், இங்கேயே கல்வி கற்கலாம். செலவும் மிகுதியாகும்” என்றார்.  

“மேற்படி மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஒரு முடிவு கிடைக்குமாயின், அதேபோன்ற 5 கல்லூரிகளை இலங்கையில் நிறுவக்கூடிய நிலைமை உண்டாகும். இதுபோன்ற கல்லூரிகள் இரண்டேனும் யாழ்ப்பாணத்துக்கு
வேண்டு​மென, அம்மாவட்ட
எம்.பி.க்கள் கோருகின்றனர். யாழ். மாணவர்கள் கல்வி கற்கத் தயாராக இருக்கின்றனர்.  

“சுதந்திரக் கல்வியை ஐக்கிய தேசியக் கட்சியே கொண்டு வந்தது. அதை நாமே அழிப்பதற்கு இடமளியோம். சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால், அது சுதந்திரம் அடையும் போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. ஆனால், இன்று சிங்கப்பூர் பல்லைக்கழகங்கள் உலகின் நான்காவது பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. இலங்கை சுதந்திரம் ​அடையும் போது, சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகள் பின்தங்கியே இருந்தன. இலங்கையைப் போன்று சிங்கப்பூரை அபிவிருத்தி ​அடையச்செய்யுமாறே முன்னர் கூறினர். ஆனால், சுதந்திரம் அடைந்து 68 வருடங்களாகிய நிலையில், நாம் எங்கே உள்ளோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நாட்டை ஆட்சி செய்த அனைவரும் இதற்கு பதில் கூறவேண்டும்” என்றுக் குறிப்பிட்டார்.  

இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, “பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் பொருட்டு, ஒரு கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, அவர்களது படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றவுடன், பெற்ற கடனைத் திருப்பி அடைப்பதற்கான வழிமுறையொன்றை செய்து கொடுக்கவேண்டும். காலை உணவுக்குக் கூடக் கஷ்டப்படும் மாணவர்கள் உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.  

“இதற்கு சபை இணங்குகின்றதா?” என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் வினவியபோது, இது ​நல்லதொரு திட்டம் என்றும் இதற்கு இணங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  

இதன்மூலம், மாணவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடிவதுடன், கடனை 100 சதவீதம் திருப்பி பெறுவதற்கான உறுதியினை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இதற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .