2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அரசியலமைப்பு பேரவையின் விவாதத்தை அஞ்சல் செய்யவும்

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 வரையிலும் செனல் ஐ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இன்றுத் திங்கட்கிழமை முதல், டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலும் அஞ்சல் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதற்கு கட்சித் தலைவர் அங்கிகரித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;.

இதேவேளை, தற்போது இடம்பெறுகின்ற சிம்பாபே, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காரணமாக, பாதீடு விவாதத்தின் நேரலை, செனல் ஐ தொலைக்காட்சியில், காலை 9.30 மணியிலிருந்து 1 மணி வரை மட்டுமே இடம்பெறும். பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை ரூபவாஹினி தொலைக்காட்சியில் அஞ்சல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே எழுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான புத்திக பத்திரண, பாதீடு விவாதத்தை அஞ்சல் செய்வதற்கு எடுத்த நடவடிக்கைக்கு நன்றி. எனினும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாரிய திரையானது செயலிழந்த நிலையில் இன்னுமே திருத்தப்படவில்லை. அதனை திருத்தியமைக்குமாறு வினயமாகக் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர ரணில் விக்கிரமசிங்க, இந்த ஒளிபரப்பின் ஊடாக இலாபத்தை திரட்டிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவையின் விவாதத்தையும் அஞ்சல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விவாதம் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே எழுந்த ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க, நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், நேரலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிநின்றார்.

குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கையை நேரலை செய்வதற்கு தனியான அலைவரிசையொன்று இன்னும் 3 மாதங்களில் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .