2025 மே 16, வெள்ளிக்கிழமை

அவையில் 'ஹோ' கோஷம்; பிரதமருக்கு இருமல்

Thipaan   / 2016 ஜூன் 21 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள விவகாரம் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் அவ்வணியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று 'ஹோ, ஹோ' என்று கோஷம் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைடைந்ததன் பின்னர், பிரச்சினையொன்றை முன்வைப்பதற்கு மட்டும், தினேஷ் குணவர்தன எம்.பி.க்கு

அனுமதியளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை எழுப்ப முடியுமே தவிர, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதனால் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு இடமளிக்க முடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இதனிடையே சபை முதல்வரும் எம்.பியுமான லக்ஷ்மன் கிரயெல்ல, எழுந்து நின்று கொண்டு ஏதேவொன்றை கூறுவதற்கு அக்கிராசனத்தின் அமைதியை கோரிநின்றார்.

இடைமறித்த தினேஷ் எம்.பி, 'ஏன் எழுந்து நிற்கிறீர்கள்? அக்கிராசனத்தின் அனுமதி கிடைத்துவிட்டது' என்று சுட்டிக்காட்டினார். இல்லை, இல்லை இந்தப் பிரச்சினையை கிளப்ப வேண்டுமாயின் 20 உறுப்பினர்களைக் காண்பிக்க வேண்டும். எங்கே, எழுந்து நில்லுங்கள் என்றார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல.

அப்போது ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 27 பேர் தங்களுடைய ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று பெரும்பான்மையை காண்பித்தனர்.

அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்து தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார். எம்.பி ஒருவரைக் கைது செய்யும் போது சபாநாயகர் அனுமதியை பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் இதற்கான பதிலை பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், உதய கம்மன்பில எம்.பி அவைக்கு வெளியே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையில், தினேஷ் குணவர்தன, பொய்யைக் கூறி அவையை தவறாக வழிநடத்தினார் என்று கூறியதுடன், இந்த விடயத்துக்கான பதிலளிக்கும் பொறுப்பை அமைச்சர் சரத்த பொன்சேகாவிடம் ஒப்படைப்பதாக கூறியிருந்தார்.

அமைச்சர் பொன்சேகா எழுந்த போது, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் மேசைகளில் புத்தகங்களால் 'டொம், டொம்' என்று சத்தம் வருமாறு தட்டியதுடன் 'ஹோ' 'ஹோ' என்று கோஷமிட்டனர். கூச்சலுக்கு மத்தியில் உறையாற்றிய அமைச்சர் பொன்சேகா, இந்தக் குழுவின் தலைவர் தான், என்னை கைது செய்து நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் பழிவாங்கினார் என்றார்.

இதனிடையே எழுந்த தினேஷ் எம்.பி, பிரதமரிடமே பதிலைக்கோட்டோம். நாட்டில் ஒரேயொரு பிரதமரே இருக்கிறார் என்றார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில், 'எனக்கு இருமல் என்பதால், பதிலளிக்கும் பெறுப்பை அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் கொடுத்தேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .