Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 24 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வு தொடர்பில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான கூட்டொப்பந்தம் கைச்சாத்திட்டு ஒரு மாதமேயாகும் நிலையில், அவ்வொப்பந்தத்தை மீறிச் செயற்படும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
“தோட்ட முதலாளிமார்கள் இன்று, மன்னர்களைப் போன்று செயற்படுகின்றனர். தோட்ட மக்கள், அவர்களுக்கு கீழேயே ஒப்படைக்கப்பட்டு விட்டதைப் போன்று நடந்துகொள்கின்றனர். கூட்டொப்பந்தமானது, ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், கடந்த மாதம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தைப் பொறுத்த வரையில், முதலாளிமாராக இருந்தாலும் சரி தொழிலாளிகளாக இருந்தாலும் சரி, சில வரைமுறைகள் இருக்கின்றன. கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாதமே ஆகின்ற நிலையிலேயே, முதலாளிமார் அதை மீறுகின்றனர். தோட்ட நிர்வாகங்களும் அவ்வாறே செயற்படுகின்றன.
“புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், உற்பத்திக் கொடுப்பனவாக, 140 ரூபாயாக வழங்குவதாக, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு நாளுக்குப் பறிக்கவேண்டிய தேயிலை நிறையை, வழமையை விடவும் அதிகரித்து தொழிலாளர்களுக்கான 140 ரூபாய் உற்பத்திக் கொடுப்பனவு வழங்குவதை, தோட்ட நிர்வாகங்கள் தவிர்த்து வருகின்றன.
“உற்பத்திக் கொடுப்பனவு வழங்குவதைத் தவிர்த்து வருகின்றமை மற்றும் தோட்டங்களைத் துப்புரவு செய்யாமை ஆகியவற்றுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.
“இவ்வொப்பந்தத்தின் பிரகாரம், தொழிலாளர்களுக்கு 140 ரூபாய் உற்பத்திக் கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும். எனினும், தேயிலை நிறையை அதிகரித்து, அந்த உற்பத்திக் கொடுப்பனவு வழங்கப்படுவதை, முதலாளிமார் மறுத்து வருகின்றனர். இது தொடர்பில், தொழில் அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். அத்துடன், இந்த விடயம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கவுள்ளோம்.
“சில கம்பனிகள், தோட்டங்களில் முறையாக மீள்-நடுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தோட்டப் பகுதிகளிலுள்ள இளைஞர்கள், வெளிப்பிரதேசங்களில் வேலை தேடிச் செல்வதற்கு இதுவே காரணமாகவும் அமைந்துள்ளது.
“தேயிலைத் தோட்டங்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவார்கள் என்று, கம்பனிகளிடம் தோட்டங்களை கையளித்த போதிலும், அவர்கள் தேயிலை பறிப்பதை மட்டுமே செய்கின்றனரே தவிர, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தேயிலைத் தோட்டத்துறைகள், நவீன மயப்படுத்தாமையினாலேயே, இளைஞர்கள் இன்று வெளியில் வேலை தேடிச் செல்கின்றனர்.
“தோட்டங்கள் முறையாக துப்புரவு செய்யப்பட வேண்டும் என்ற சரத்தொன்று, கூட்டொப்பந்தத்தில் இருக்கிறது. எனினும், கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாதமே ஆகின்ற நிலையில், முதலாளிமார் அந்த சரத்தை மதித்துச் செயற்பட்டிருக்கவில்லை.
“இவ்வாறான நிலையில், தேயிலைச் சபையின் ஊடாக தோட்டக் கம்பனிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், அந்த விடயத்தை அமைச்சர், மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக தோட்டங்களைத் துப்புரவாகப் பேணிவரும் கம்பனிகளைத் தவிர்ந்த ஏனைய கம்பனிகளுக்கு, அந்த உதவி வழங்கப்படக்கூடாது.
“இதேநேரம், பாடசாலைக்கென இரண்டு ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற உடன்பாடு முதலாளிமாருடன் இருக்கிறது. எனினும், அவிசாவளை, தெஹியோவிட்டவில் பாடசாலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், காணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவர்கள், அங்குள்ள சிங்கள பாடசாலையொன்றுக்கே செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. அதுவும், சிங்கள பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னரே, தமிழ் மாணவர்கள் அங்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.
“அதுமட்டுமன்றி, ஹட்டன் - டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியையும் வழங்குவதற்கு, அந்த தோட்ட நிர்வாகம் மறுத்து வருகின்றது. இவை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க கலந்தாலோசித்து வருகின்றோம்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago