2024 மே 18, சனிக்கிழமை

டெங்கு: கட்டுப்படுத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளோம்

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“நாட்டின் பல மாவட்டங்களில் தற்போது வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்ன, நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின் கீழ், கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.  

முன்னதாக, “இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 3 மாதங்களாக டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகின்றது. சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இது தேசிய சுகாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது. எனவே, இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்” என்று, தினேஷ் எம்.பி கேட்டிருந்தார்.  

இதன்போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவையில் இல்லாததால், சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 

“இந்தக் காய்ச்சல் தாக்கமானது நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த நாமும் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தற்போது டெங்குக் காய்ச்சல் அதிகமாகப் பரவும் கிண்ணியா மற்றும் திருகோணமலை பிரதேசங்கள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்” என்றார். 

அதனையடுத்து, எழுந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், “டெங்கு காய்ச்சல் பரவும் பகுதிகளைக் கட்டுப்படுத்த தற்போது போதியளவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முப்படைகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. அத்தோடு, நோயாளர்களுக்குத் துரித சிகிச்சை வழங்கும் நோக்கில் கூடியளவிலான வைத்தியர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார். அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,“டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதுவிடயம் தொடர்பில் அமைச்சர்களும் அவதானத்துடனேயே இருக்கிறார்கள்.

மாலைதீவில் பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சீனாவில் பறவைக் காய்ச்சல் என, பல்வேறு நாடுகளில் பல்வேறு நோய்கள் பரவியுள்ளன. எனவே, சுற்றுலா பிரயாணிகளின் தொடர்பிலும் நாம் அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .