2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

முறைப்பாடுகள் அதிகரிக்கின்றன; தீர்ப்பதில்தான் தாமதம்

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“இலஞ்ச, ஊழல்கள் சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப் பெற்றாலும் அவற்றை விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லாமையினால் முறைப்பாடுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன” என, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும கூறினார்.  

அத்துடன், “இலஞ்ச, ஊழல்கள் சம்பந்தமான விசாரணைகளைத் துரிதப்படுத்த ஆணைக்குழுவில் சுயாதீன அதிகாரிகளை இணைத்துக்கொள்வதுடன், விசேட நீதிமன்றங்களை நிறுவி, வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.  

நாடாளுமன்றில், புதன்கிழமையன்று இடம்பெற்ற, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.  

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நல்லாட்சி அரசாங்கம் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை சிறப்பான முறையில் இயங்க வைத்துள்ளதால் மக்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாளுக்கு நாள் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், முறைப்பாடுகளைத் தீர்த்து வைப்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.  

வரலாற்றில் அதிகளவு இலஞ்ச ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது 2015ஆம் ஆண்டாகும். அவ்வாண்டில் 108 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் 52 வழக்குகளே தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்வழக்குகளை விசேட நீதிமன்றம் ஒன்றின் கீழ் விசாரணை செய்தால் மாத்திரமே வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய முடியும்.  

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை 690க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. 290க்கு மேற்பட்ட சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஊடாக இந்தச் செயற்பாட்டுக்கு அதிகாரிகள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இவ்வாறான நிலை தொடர்ந்தால் முறைப்பாடுகள் அதிகரிக்குமே தவிர அவற்றுக்கு தீர்வு காண முடியாது போகும்.  

எனவே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடன், இது சம்பந்தமான விசாரணைகளைத் துரிதப்படுத்த விசேட நீதிமன்றம் தாபிப்பதன் ஊடாக இலஞ்சம், ஊழல் வழக்குகளுக்குத் தீர்வினை வழங்க வேண்டும்.  

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அதிகளவு முறைப்பாடுகள் கடந்த இரு வருடங்களிலே செய்யப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு 1,512 முறைப்பாடுகளும், 2016 ஆம் ஆண்டு 1234 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .