2024 மே 23, வியாழக்கிழமை

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்: ‘எம்முடன் கலந்துரையாடி திருத்தவும்’

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தும்போது நாடாளுமன்றில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியே அடுத்தக்கட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதிகளை கைமீட்டல், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“யுத்தகாலத்தின்போது கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.   

யுத்த காலங்களில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அப்பிரதேசங்களில் வாழமுடியாத காரணத்தினால் அங்கிருந்து வெளியேறியவர்கள் தற்போது மீண்டும் குடியேறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  

மட்டக்களப்பில் 1988, 89 மற்றும் 90களில் வெளியேறிய மக்களின் காணிகள், அரச காணிகள் என பிரதேச செயலாளர்களால் தெரிவிக்கப்பட்டு அவர்களின் குடியேற்றத்துக்கு தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பில் நீதியமைச்சு விசேடமாக கவனம் செலுத்த வேண்டும்.  

மட்டக்களப்பில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் காணிகள், விடுதலைப் புலிகளால் சுவீகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.   

தற்போது அக்காணிகளில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை வெளியேறுமாறு கூறவும் முடியாத, சொந்தக்காரர்களுக்கு காணிகளை வழங்கவும் முடியாத ஒரு இக்கட்டான சூழலே அங்கு காணப்படுகின்றது.   

அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, வடக்கு- கிழக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் எவ்வித சிக்கலுமின்றி குடியேறத் தேவையான காணி உறுதிப்பத்திரம் உள்ளிட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நாம் இச்சபையில் கேட்டுக்கொள்கிறோம்.   

அத்தோடு, இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. ஷரீஆ சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரும்நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவுக்கு நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் சார்பிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் யோசனைகள் முன்வைப்பட்டள்ளன. இதனை நாம் வரவேற்கிறோம்.   

எனினும், இந்த மாற்றம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் இதுதொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் ஆலோசித்த பின்னர், அல் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் இணங்கியே அரசாங்கம் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.   

மேலும், சிறையில் வாடும் கிழக்கு, வடக்கு இளைஞர்கள் தொடர்பிலும் நீதியமைச்சு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். யுத்தம் நிலவியபோது பாடசாலைக் காலத்தில் பிடிக்கப்பட்டவர்கள் கூட இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள்.    யுத்தமோ முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இன்னும் யுத்த வடுக்களை கூறிக்கொண்டிருந்தால்

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. எனவே. கடந்த கால தவறுகளை மறந்து, இழப்பீடுகளை வழங்கி, ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்யும் போது தான் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை காணமுடியும்” என்றார். 

‘கலந்தாலோசிப்போம்’

“முஸ்லிம் விவாவ மற்றும் விவாகரத்து சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள, சகல முஸ்லிம் உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று (23) தெரிவித்தார்.  

முன்னதாக உரையாற்றிய  இராஜாங்க ஹிஸ்புல்லா, ‘ஷரீஆ சட்டத்தின் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  

 இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ, மேற்கண்டவாறு  தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .