2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ஷாமர கபுகெதர

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷாமர கபுகெதர  சகல  கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறு வதாக அறிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் 11 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ள ஷாமர கபுகெதர, 8 டெஸ்ட் போட்டிகள் உட்பட 163 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 2,500 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார்.

கண்டி – தர்மராஜ கல்லூரியில் இருந்து இலங்கை அணிக்கு உள்வாங்கப்பட்ட ஷாமர கபுகெதர, தன்னுடைய 19வது வயதில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 2006ம் ஆண்டு பேர்த்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினார். 

இயற்கையாகவே வேகமாக ஓட்டங்களை குவிக்கக் கூடியவராகவும், பௌண்டரிகளை இலகுவாக விளாசக் கூடியவருமான ஷாமர கபுகெதர 2006 – 2012ம் ஆண்டுவரை இலங்கை அணிக்குள் இடத்தை பிடித்திருந்தார்.

எனினும், இதற்கிடையில் அவர் அவ்வப்போது அணியிலிருந்து நீக்கப் பட்டும், உள்வாங்கப்பட்டும் வந்தார்.

எனினும், குறித்த காலத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திவந்த இவர், 13 அரைச் சதங்களை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார். 

இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இலங்கை அணிக்கு மறக்கமுடியாத தருணம் 2010ம் ஆண்டு நடைபெற்ற T20I உலகக் கிண்ணம். குறித்த T20I உலகக் கிண்ணத்தின் 23வது போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி போட்டியில் வெற்றிபெற்று, இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியிருந்தது.

இந்தப் போட்டியில் இறுதிப் பந்துக்கு 3 ஓட்டங்கள் தேவை யென்ற நிலையில், துடுப்பெடுத்தாடிய ஷாமர கபுகெதர, அசிஸ் நெஹ்ராவின் பந்துக்கு சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.

அதேநேரம், கடந்த 2017ம் ஆண்டு இலங்கை அணிக்குள் மீள்வருகையை பெற்றிருந்த கபுகெதர, பல்லேகலையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், உபுல் தரங்கவுக்கு பதிலாக தற்காலிக அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .