2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தென்னாபிரிக்கத் தொடரிலிருந்து அன்டர்சன் விலகல்

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன், விலாவென்பு காயமொன்று காரணமாக விலகியுள்ளார்.

நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இறுதி நாளிலேயே காயத்துக்குள்ளான ஜேம்ஸ் அன்டர்சன், வெற்றியை நோக்கி இங்கிலாந்து சென்ற நிலையில், வலிக்கு மத்தியிலும் ஜேம்ஸ் அன்டர்சன் தொடர்ந்தும் பந்துவீசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று  ஜேம்ஸ் அன்டர்சன் ஸ்கானொன்றுக்கு உள்ளானபோதே அவரது காயமானது தசை நார் சம்பந்தப்பட்டது அல்ல எனவும் என்பு சம்பந்தப்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், இவ்வாறான காயங்கள் குணமடைவதற்கு ஆறு தொடக்கம் எட்டு வாரங்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்தொடரின் ஆரம்பத்தில் பல இங்கிலாந்து வீரர்கள் சுகவீனமுற்றிருந்த நிலையில் இங்கிலாந்துக் குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் கிரேய்க் ஒவெர்ட்டன் தொடர்ந்தும் குழாமில் நீடிக்கவுள்ளார்.

எவ்வாறெனினும், இங்கிலாந்துக் குழாமில் ஏற்கெனவே காணப்படுகின்ற ஜொவ்ரா ஆர்ச்சர் உடற்றகுதியை அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், மூன்றாவது டெஸ்டில் ஜேம்ஸ் அன்டர்சனை அவர் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, இங்கிலாந்துக் குழாமிலுள்ள மார்க் வூட்டும் உடற்றகுதியை அடைந்து வருவதாகக் கூறப்படுவதுடன், கிறிஸ் வோக்ஸும் குழாமில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .