2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

யுனைட்டெட்டை வென்றது லிவர்பூல்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லிவர்பூலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் லிவர்பூல் வென்றது.

இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில், சக பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்டின் மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய லிவர்பூலின் இன்னொரு பின்களவீரரான வேர்ஜில் வான் டிஜிக், ஆரம்பத்திலேயே லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து லிவர்பூலின் முன்களவீரரான றொபேர்ட்டோ பெர்மினோ, லிவர்பூலின் முன்னிலையை இரட்டிப்பாக்கியதாகக் கருதப்பட்டபோதும், றொபேர்ட்டோ பெர்மினோவிடம் பந்து வருவதற்கு முன்னால் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியாவை வேர்ஜில் வான் டிஜிக் விதிமுறைகளை மீறி கையாண்டார் என காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பில் தீர்மானிக்கப்பட்டு கோல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

பின்னர், சக மத்தியகளவீரரான அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லினிடமிருந்து பெற்ற பந்தை லிவர்பூலின் இன்னொரு மத்தியகளவீரரான ஜோர்ஜினியோ விஜ்னால்டும் கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்தபோதும், அவர் ஓஃப் சைட்டில் இருந்தார் என இக்கோலும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனே கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து கோல் பெறும் வாய்ப்பை லிவர்பூலின் முன்களவீரர் மொஹமட் சாலா தவறவிட்டிருந்ததுடன், கோல் கம்பத்தை நோக்கிய ஜோர்டான் ஹென்டர்சனின் உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

பின்னர், போட்டியின் 59ஆவது நிமிடங்களில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான அன்டோனி மார்ஷியல் கோல் பெறும் வாய்ப்பொன்றை கோல் கம்பத்துக்குள் மேலால் செலுத்தியிருந்தார்.

இறுதி நிமிடங்களில் லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் வழங்கிய பந்தை மொஹமட் சாலா கோலாக்கிய நிலையில், இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இந்நிலையில், பேர்ண்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது. பேர்ண்லி சார்பாக, கிறிஸ் வூட், அஷ்லி வெஸ்ட்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகிறது. 48 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றியும், 45 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. 34 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .