2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உயர் ஸ்தானிகரின் செய்தி

J.A. George   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுபோவன், வணக்கம், நமஸ்கார்!!

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள சகல இந்தியர்களுக்கும், இலங்கையைச்சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கும்  நல்வாழ்த்துகள்.

இவ்வருடம் இலங்கையும் தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அதேவேளை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவினையும் இவ்வருடம் குறித்துநிற்கின்றது. இந்தியா தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினை கடந்த வருடம் கொண்டாடியது. இந்நிலையில், மிகவும் நெருக்கமான உறவினைக்கொண்டிருக்கும் அயல் நாடுகளாகவும் நண்பர்களாகவும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்துக்காக இந்தியாவும் இலங்கையும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடத்தில் முன்னொருபோதுமில்லாத வகையில் கிட்டத்தட்ட நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இந்தியாவால் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்டிருந்தது. இவ்வருடம் இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி ரீதியான உத்தரவாதத்தினை வழங்கவும் இருதரப்புக் கடன் வழங்குனராக முதலில் முன்வந்த நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இலங்கை மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பினை இவ்வாறான செயற்பாடுகள் வெளிக்காட்டுகின்றன.

அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்ஷங்கர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் காரணமாக உட்கட்டமைப்பு, உற்பத்தித்துறை மற்றும் தொடர்புகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு மேலதிக ஒத்துழைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா காணப்படும் அதேநேரம் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக ரூபாவைப் பயன்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் ஆதரவினை வழங்கும் ஒரு நடவடிக்கையாகும். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய உறுதியான செயற்பாடுகளாகும்.

கடந்த வருடம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான மிகப்பெரிய மூலாதாரமாக மீண்டும் ஒருமுறை இந்தியா காணப்பட்டமை குறித்து நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையானது இரு நாடுகளினதும் மக்களிடையிலான தொடர்புகளை மேலும் நெருக்கமாக்குவதில் இன்னொரு முக்கிய படிநிலையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவைகள் இதனை மேலும் வலுவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - இலங்கை உறவுகளில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகள் எமது நட்புறவையும் சகலதுறை  ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்கியுள்ளன. அதேநேரம், விசேடமாக கடல் சார் பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

 2023 பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை தனது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அழகிய இத்திருநாட்டின் மக்களுக்கு 75 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும், அத்துடன் இந்தியா தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருக்குமென உறுதியளிக்கின்றேன்.

( கோபால் பாக்லே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X