Editorial / 2026 ஜனவரி 22 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடல் எடை குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் இளம் பெண்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யூடியூப், சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத குறிப்புகளை நம்பி மருந்துகள், டயட் முறைகளை பின்பற்றுவது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடைக் குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலமுறை அறிவுறுத்தியும் கூட சில விபரீதங்கள் நடந்துவிடுகின்றன.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் கலையரசி 19 வயதாகிறது.. இவர் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆர்வம் காரணமாக கலையரசி கடந்த சில நாட்களாக யூடியூப்பில் வெளியாகும் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
யூடியூப்பில் கூறப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில், கடந்த 17-ம் திகதி மதுரை கீழமாசி வீதியில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றிற்கு கலையரசி நேரில் சென்று, அங்கு சில நாட்டு மருந்து பொருட்களை வாங்கியுள்ளார்
டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், யூடியூப்பில் பார்த்த தகவல்களை மட்டும் நம்பி அவர் அந்த மருந்துகளை வீட்டுக்கு சென்று சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கலையரசிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர் உடனடியாக அவரை மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது பிறகு உடல்நலம் சீராகிவிட்டதாக கூறி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், மறுநாளே அதாவது ஜனவரி 18 ஆம் திகதி இரவு மீண்டும் கலையரசிக்கு கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நிலை மோசமானதை தொடர்ந்து, பெற்றோர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கலையரசி உயிரிழந்துவிட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்களும் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கலையரசியின் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலையரசி எந்த வகையான நாட்டு மருந்துகளை உட்கொண்டார், அவை உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததா என்பதைக் கண்டறிய பொலிஸார் தகவல் சேகரித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுப் போக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் சொல்லி தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். அதற்கு பிறகுதான் ராஜாஜி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.. ஆனால் வழியிலேயே மகளின் உயிர் பறிபோய்விட்டது.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago