2025 மே 09, வெள்ளிக்கிழமை

’தியா’ என்னுடைய கதை; வலுக்கிறது அடுத்த சர்ச்சை

Editorial   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, நாக ஷவுரியா, பேபி வெரொனிகா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தியா'. இந்நிலையில் 'தியா' என்னுடைய கதை. அதை திருடிவிட்டார்கள் என உதவி இயக்குனர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் தி ஹிந்து தமிழ் இணையதளத்துக்கு கருத்து தெரிவித்த அவர் ''நான் இயக்குனர் ராஜகுமாரனிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவன். கருக்கலைப்பு என்பது பாவச்செயல் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக கருவிலேயே அழிந்த பிறக்காத ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தன்னை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறது என்று படம் நகரும் விதத்தில் 2015ஆம் ஆண்டில் கதை எழுதினேன்.

அன்பழகன் என்ற நண்பர் மூலம் இலங்கைத் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறினேன். படம் பண்ணுவதற்கு அவரும் சம்மதித்தார். இயக்குனர் ராஜகுமாரன் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முற்பணம் வாங்கும் மகிழ்ச்சியில் இருந்த எனக்கு 'தியா' பட விமர்சனம் பார்த்து இதயத்தில் இடி இறங்கியது.

என் படத்தின் கதை அப்படியே 'தியா' என்ற படமாக வெளிவந்ததும், அதன் கதையையும் நாளிதழில் எழுதி இருந்தார்கள். பதற்றம் தாங்கவில்லை. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. நீண்ட நேர பரபரப்புக்குப் பிறகு படம் பார்க்க முடிவு செய்தேன். திரையரங்கம் சென்று படம் பார்த்தால் அப்படியே என் கதை. என்னால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சில மாற்றங்களை மட்டுமே செய்திருந்தார்கள். தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் உள்ளிட்ட பாத்திரப் படைப்புகள், அடிப்படைக் கதை என்னுடையதுதான். படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்த நிலையில் நான் செய்வது? நான் சில ஆண்டுகளாகப் பலரிடம் கூறி வந்தது, பலருக்கும் தெரிந்தது இப்போது அது படமாக வந்திருக்கிறது.

இந்தக் கதையைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களிடம் பேசியது,  அந்த நண்பர் அன்பழகனிடம் தொலைபேசியில் எல்லாம் பதிவு செய்யப்பட்டு என்னிடம் உள்ளன. என்னிடம் தயாரான முழுத் திரைக்கதையும் உள்ளது. இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்கு சாட்சியாக இயக்குனர் ராஜகுமாரன் உள்ளிட்ட பல நண்பர்கள் உள்ளனர்.

எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் 'தியா 'ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும்.

இயக்குனர் விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர் எடுத்த படத்தின் கதை என்னுடையது. தியா கதையின் உரிமையாளர் நான் தான். கதை வெவ்வேறு நபர்களிடமிருந்து பரவி இயக்குனர் விஜய்க்கு சென்றிருக்கலாம். அதற்காக நான் உரிமை கொண்டாடாமல் இருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X