2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முடிவுக்கு வந்தது கௌதம் - கார்திக் சண்டை

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருவங்கள் 16 திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம்‘நரகாசுரன்’. கௌதம் மேனன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்ட நிலையில் இயக்குநர்கள் கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இடையேயான டுவிட்டர் மோதலானது சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், குறித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக இயக்குநர் கௌதம் மேனன் அவரது டுவிட்டர் வளைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், நரகாசூரன் படத்தில் அவரது ஆக்கப்பூர்வமான நகர்வை பார்த்த எனக்கு அவரது டுவிட்டர் கருத்து வருத்தத்தை அளிக்கிறது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் அவ்வாறு தவறாக ஏதும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். எனினும் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

படத்தை ரிலீஸ் செய்ய பின்னணி வேலைகள் நடந்து வருகின்றது. நரகாசூரன் படத்தின் எந்த பணியிலும் நான் குறுக்கிடவில்லை. கதை கேட்பது, தயாரிப்பு என அனைத்து பணிகளையும் எனது குழுவே கவனித்து வர அவருக்கு தேவையானதை தயாரிப்பாளர்களும் வழங்கினர். அவர் கேட்டதின் பேரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரை ஒப்பந்தம் செய்தோம். பின்னணி இசைக்காக கார்த்திக் மெக்கடோனியா சென்றார். 

இந்த படத்திற்கு செலவு செய்யும் பணத்தை எனது ஏனைய படங்களுக்கு செலவிட முடியாது. இந்த படத்தை விட துருவ நட்சத்திரம் செலவில் 7 மடங்கு அதிகமான படம். அந்த படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். நான் படக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். 

இங்கு சினிமாவில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் கார்த்திக் தவறான முறையில் அனுகிவிட்டார். யாராலும் படத்தின் வெளியீட்டினை தடுக்க முடியாது.

துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா என இரு படங்களும் நடிகர்களின் திகதி ஒதுக்கீட்டை வைத்தே உருவாகி வருகின்றது. 

இதுவரை துருவ நட்சத்திரம் 70 நாட்கள் படப்பிடிப்பும், எனை நோக்கி பாயும் தோட்டா 45 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த இரு பெரிய படங்களுமே இந்த ஆண்டுக்குள் வெளியாகும். இதில் துருவ நட்சத்திரம் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன, எனவே படத்தை குறுகிய இடைவெளியில் முடிக்க முடியவில்லை. இந்த இரு படங்களுமே இருவேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இருபடங்களிலுமே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான அளவிலேயே படத்திற்கு திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதேபோல செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் நான் சம்பந்தமாகவில்லை. ஆனால் படம் குறித்த செல்வராகவனின் யோசனை மற்றும் கதை குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். பின்னர் அந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்தார். இந்த படத்திற்கு நான் தயாரிப்பாளர் அல்ல. ஆனால் பங்குதாரர். போஸ்டரில் எனது பெயர் வரவேண்டும் என்று மதன் விரும்பினார். ஒரு படைப்பாளியாக செல்வா சிறந்தவர். திறமையானவர். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. வெகு விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படமும் வெளியாகும். 

எல்லா படங்களுக்கும் வரும் பிரச்சனை தான் நரகாசூரன் படத்திற்கும் வந்திருக்கிறது. ஒரு குழு சிறப்பாக பயணிக்கும் போது, அவர்களுக்கு சில தடங்கல்கள் வரலாம். அந்த காலம் தான் இது.

நரகாசூரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் விரைவில் வெளியாகும். இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். எனவே கார்த்திக் அவரது அடுத்த படத்திற்கான (நாடகமேடை) பணிகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். ஒரு சரியான இடைவேளையில் படம் வெளியாகும். அரவிந்த்சாமிக்கும் கொடுக்க வேண்டிய தொகையை முழுவதும் செலுத்தாததால் அவர் படத்திற்கு டப்பிங் செய்யவில்லை. தற்போது அந்த பிரச்சனைக்கு முடிவு வந்துவிட்டது. எனக்கும், கார்த்திக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தற்போது களையப்பட்டுவிட்டது. விரைவில் திரையில் சந்திக்கலாம். நன்றி. இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X