2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உலக நாயகன் கமலுக்கு 57...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே... அன்புடனே ஆதரிக்கும் அன்னையும் நீயே...' என்ற பாடலை கண்ணீர் மல்க முருகனை பார்த்து பாடும் குழந்தையை பார்க்கும் எவரும் ஒரு கணம் அவர்களை மறந்து அந்த பாடலில் லயித்து விடுவர்.

சுட்டிக்குழந்தையாய் முகத்தில் அத்தனை பாவங்களையும் தேக்கி தன் வேண்டுதலை முருகனிடம் தெரிவித்த அந்த குழந்தைதான் உலகநாயகனாய் இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ள கமல்ஹாசன். ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்ட அவர், தனது 57ஆவது பிறந்த இன்று நாளைக் கொண்டாடுகிறார்.

குழந்தையாய் அறிமுகமான படத்திலேயே அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். காதல் இளவரசனாகி இளசுகளின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இன்றைக்கு காலத்தை வென்ற நாயகனாக உயர்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிய முதல் தமிழர் அவர்.

சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள் மூலம் மக்களை சென்றடையச் செய்தவர் கமல்;. களத்தூர் கண்ணம்மா முதல் மன்மதன் அம்பு வரை கமல்ஹாசன் ஏற்று நடித்த ஒவ்வொரு பாத்திரமும் ஒரு சரித்திரத்தை உள்ளடக்கியிருக்கும்.

குழந்தையாக அறிமுகமான படத்திலேயே அற்புதமான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருது பெற்றார். பின்னர் மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் என மூன்று படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று பெருமை சேர்த்தவர் கமல்.

பதினெட்டுமுறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்தவர். எனக்கு இனி விருதே வேண்டாம் என்று எழுதிக் கோரியவர். பல மாநில அரசுகளின் விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். விருதுகளுக்கு புது அர்த்தமும், பெருமையும் பெற்றுத் தந்தவர் உலக மகாநாயகன் கமல்ஹாசன்.

விசிலடிக்கவும், பாலபிஷேகம் செய்யவும் மட்டும்தான் ரசிகர்கள் என்றிருந்த நிலையை மாற்றி ரசிகர்கர்களை நற்பணி செய்யத் தூண்டினார். அதற்கு தலைவராக தாமே இருந்து ரசிகர்களை நல்வழிப்படுத்துகிறார். ரசிகர்களை நற்பணி நாயகர்களாக திருப்பிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.

நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரும் இரத்ததானம் செய்ய வைத்த நடிகர். இன்றைக்கு இந்தியாவிலேயே ரத்ததானம் செய்யும் திரை ரசிகர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் கமல் ரசிகர்கள் மட்டுமே.

இன்று கமல்ஹாசன் பிறந்த நாள். 1960ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து உலகநாயகனின் கலைப்பயணம் 2011 வரை 50 ஆண்டுகளையும் கடந்து நீடிப்பதற்கு அவரது தீராத கலை தாகம்தான் காரணம்.

தனது பிறந்த நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன்.

என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான். அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச்செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான். அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக்கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.

முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்வது. நானும் என் ரசிகன்தான். என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை நான் நடிகன், கலைஞன். மலர் போன்றவன். அதனால் அதை எப்படிப் பாதுகாக்கணுமோ அப்படி பாதுகாத்துக் கொள்வேன். விமர்சனங்களை மெலிதாகச் சொல்லி, வாடிவிடாமல் இருக்க அவ்வப்போது பாராட்டு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 08 November 2011 08:29 PM

    நடிப்பின் முதிர்ச்சி, கருத்திலும் வெளியாகி உள்ளது. நடிப்பில் இன்னும் சாதனைகள் புரிய வேண்டும்.

    Reply : 0       0

    Faizer Tuesday, 22 November 2011 05:13 AM

    யதார்த்தம் பொங்கும் நடிப்பு - அவருக்கு
    நடிப்பு என்பது நாடித்துடிப்பு.

    Reply : 0       0

    Hazeer Monday, 26 December 2011 07:27 PM

    யதார்த்தமான நடிப்புக்கு கமல்தான் மிக சிறந்த உதாரணம், அவரே அதற்கு முன்மாதிரி .

    Reply : 0       0

    thaya Wednesday, 18 January 2012 04:40 PM

    கமலை தவிர மற்ற நடிகர்கள் தமிழ் திரை உலகத்துக்கு என்ன செய்தார்கள்? தங்கள் பணம் sampathiththathai தவிர.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X