2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறந்த வில்லனாக ரஜினி...

Menaka Mookandi   / 2011 ஜூன் 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எந்தவொரு தெரிவுக்குழுவும் நியமிக்கப்படாத நிலையில் முற்றும் முழுதாக ரசிகர்களால் மாத்திரமே வாக்களிக்கப்பட்டு வழங்கப்படும் விருதுகள் என்ற பெருமை விஜய் திரைப்பட விருதுகளுக்கு உண்டு.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான திரைப்படக் கலைஞர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்களுக்கான விருதுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை நேரு அரங்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில் மொத்தமாக 149 திரைப்படங்கள் போட்டியிட்டன. அவற்றிலிருந்து தெரிவான கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளின் அடிப்படையில், ராவணன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக விக்ரமும் அங்காடித்தெரு படத்தில் நடித்த அஞ்சலி சிறந்த நடிகையாகவும் தெரிவாகியுள்ளனர். அத்துடன், சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் சார்பில் அவரது மருமகன் தனுஷ் பெற்றுக்கொண்டார். 

இதேவேளை, அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்ததுடன் இந்தத் திரைப்படமே இவ்வாண்டின் சிறந்த திரைப்படமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார். மைனா திரைப்படத்தின் நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா போல் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். சிறந்த நகைச்சுவை நாயகன் விருதினை சந்தானம் தட்டிச்சென்றார். சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்கும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X