2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஜயிடமிருந்து விடைபெற்ற சூர்யா...

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


அறிவுக்கு பரிசளித்து மக்கள் கஷ்டங்களைப் போக்கிய நிகழ்ச்சி என்று அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த விஜய் டி.வி.யின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்து 20 அத்தியாயங்களைப் பூர்த்தி செய்த நிலையில் நிறைவடைந்தது 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சூர்யா, ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டி பரிசுத்தொகைகளைத் தட்டிச்சென்ற அதேவேளை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்குபற்றி சிற்சில தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றித்தொகையை பரிசாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்களான சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் நடத்தும் 'அகரம' பவுன்டேஷன், ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் நடிகை சுஹாசினியின் 'நாம்' பவுன்டேஷன் ஆகியவற்றுக்கு நிதி சேகரிப்பதற்காக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பங்குபற்றி விளையாடினர். இந்தவார இறுதியில், சத்யராஜ், ராதா, குஷ்பூ, பிரதாபன், நதியா, ரகுமான், சுஹாசினி, மோகன் ஆகியோர் பங்கேற்று விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் சூர்யா, தனது மன உணர்வுகளை மிகவும் வருத்தத்தோடு வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுடன் பழக கிடைத்த வாய்ப்பு தன்னை நடிகர் என்ற ஸ்தானத்தையும் மீறி இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

அத்துடன், நிகழ்ச்சியில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் மாத்திரமே பொறுப்பு என்று மிகவும் தன்னடக்கத்துடன் கூறியிருந்தார். சூர்யாவின் அந்த தன்னடக்கத்துக்கான பாராட்டு, நிகழ்ச்சியின் இறுதி நாள் விருந்தினராக வருகை தந்திருந்த சிவகுமாருக்கு நேரடியாகக் கிடைத்தது.

தந்தையின் நேரடி வாழ்த்துக்களுடனும், நிகழ்ச்சியின் 20 அத்தியாயங்களில் இடம்பெற்ற மறக்க முடியாத காட்சிகளை மீண்டும் ஒளிபரப்பு செய்தும் சூர்யா இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இறுதியில், விஜய் டி.வி.யில் பணியாற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விஜயிடமிருந்து விடைபெற்றார் சூர்யா.


You May Also Like

  Comments - 0

  • ASH Friday, 13 July 2012 12:29 PM

    நான் என் வாழ்க்​கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி.............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X