2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆளவந்தானுக்கு ஹொலிவூட் அங்கீகாரம்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்திற்கு ஹொலிவூட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு வெளியான அக்ஷன் திரில்லர் திரைப்படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் முழுவதும் கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலைதூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டன.

ரவீனா தண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ஆம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.

இத்திரைப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இத்திரைப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் கவலைப்படவே இல்லை என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் ஆளவந்தான் திரைப்படத்திற்கு ஹொலிவூட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அதிசயித்துள்ள ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளர் குவென்டைன் டரன்டினோ, தனது கில் பில் திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.

இந்தத் திரைப்படம் 2003ஆம் ஆண்டு உருவானதாகும். ஆனால் திரைப்படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003இலும், இரண்டாம் பாகத்தை 2004ஆம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3ஆவது பாகத்தை 2014இல் வெளியிடவுள்ளார்.

ஆளவந்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர், அதே பாணியில் தனது திரைப்படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் திரைப்படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.

அண்மையில் மும்பை சென்றிருந்த குவன்டைன், பொலிவூட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இது குறித்துக் கூறினாராம். ஹொலிவூட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் குவன்டைன்.

இது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், 'ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹொலிவூட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய திரைப்படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரிந்துகொள்வார்கள் என கருதுகிறேன்' என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • Srilankan Wednesday, 25 July 2012 12:15 PM

    கமல் இன்றைய சிந்தனையாளர் அல்ல, அதனால்தான் அவரது திரைப்படங்களை எல்லோராலும் புரிய முடிவதில்லை. அவரது அன்பே சிவம் தோல்வி அடைந்தது அதனால்தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X