2025 மே 19, திங்கட்கிழமை

நெருக்கடியில் 'ஆரம்பம்'

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


தீபாவளிக்கு முன்னரே வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட அஜீத்தின் ஆரம்பம் திரைப்படத்துக்கு எதிராக வழக்குகளும் ஆரம்பமாகிவிட்டன. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், தனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4.6 கோடி தர வேண்டியிருப்பதாக சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது மகன் பி.ஆனந்த கிருஷ்ணன் சார்பில் இந்த மனுவை நான் தாக்கல் செய்துள்ளேன். சினிமா தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி, 'கேடி' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எனது மகனிடமிருந்து ரூ.1.50 கோடி கடன் வாங்கினார்.

இந்தப் பணத்தை 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தற்போது நடிகர்கள் அஜித், நயன்தாரா, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ள 'ஆரம்பம்' திரைப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். வரும் தீபாவளியன்று இந்தப் படத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், என் மகனிடம் இருந்து வாங்கிய கடன் ரூ.1.50 கோடி மற்றும் அதற்குரிய வட்டித் தொகையுடன் சேர்த்து ரூ.4.60 கோடி தரவேண்டும் என ஒக்டோபர் 5ஆம் திகதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. அதனால், என் மகனிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் 'ஆரம்பம்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் நித்தேஷ் நட்ராஜ், வைபவ் ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் ஆஜராகினர். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒக்டோபர் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

அக்டோபர் 31ஆம் திகதி 'ஆரம்பம்' திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தியேட்டர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த புதிய நெருக்கடி எழுந்துள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X