2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அசர வைக்கும் அனுஷ்கா

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் அல்டிமேட் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய திரைப்படமான லிங்காவிலும் அனுஷ்காவையே கதாநாயகியாக தெரிவு செய்துள்ளனர்.

தமிழில் ஒரு படம்கூட வாய்ப்பு இல்லாததால் தனது சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், சினிமாவில் உச்ச கட்டத்தில் இருக்கும் பெரிய ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடிக்க வந்த வாய்ப்பால் திக்குணிக்காடி போய்விட்டாராம் அனுஷ்கா.

இவரது இந்த அசுர வளர்ச்சியைக் கண்டு இவருடைய சக நடிகைகள் கலங்கிப் போயுள்ளார்களாம்.

அனுஷ்காவின் தாய்மொழி கன்னடம். தமிழ் தெரிந்தாலும் சரளமாக பேச வராது. அதனால் அனுஷ்கா நடித்த தமிழ்ப் படங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் தான் இதுவரை குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்முறையாக அனுஷ்காவே சொந்தக் குரலில் டப்பிங் பேசவிருக்கிறாராம்.

அஜீத் - கௌதம் மேனன் திரைப்படத்தில் அனுஷ்கா நாயகி. சில தினங்கள் முன் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அனுஷ்காவுடன் இன்னொரு நடிகையும் நடிக்க உள்ளார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகாமலே உள்ளது.

இந்த திரைப்படத்தில் அனுஷ்கா சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளதாக படப்பிடிப்புக் குழு தெரிவித்துள்ளது. தமிழில் அவர் டப்பிங் பேசுவது இது முதல்முறை என்பதால் பயிற்சி எடுத்து வருவதாகவும் யுனிட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காதலை அனுபவிக்கணும்: சிம்பு

காதலில் விழுந்த சிம்பு அத்தனையும் இழந்து இப்போது தனி ஆளாக நிற்கிறார். அவர் தனது காதல் தோல்விகள் பற்றியும் காதலைப் பற்றிய புதிய கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது,
 
எனக்கு இப்போது 30 வயதாகிறது. நானும் ரொம்ப சின்ன வயசிலிருந்தே லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆட்டோகிராப் திரைப்படத்தில் 3 காதலிகள் இருப்பார்கள்.  ஸ்கூல், காலேஜ்னு அந்த திரைப்பட ஹீரோவுக்கு 3 காதலிகள் இருக்கிறப்போ எனக்கு இருக்கக் கூடாதா...?

உலகத்திலேயே முக்கியமான உணர்ச்சி காதல்தான். காதலிக்கும் போது நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். அது நம்முடைய வாழ்க்கைக்கு பொசிட்டிவாகவோ, நெகட்டிவாகவோ தேவைப்படுகிறது.
 
காதலில் வெற்றிபெற்றதன் மூலம் சிலருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. காதலில்  தோற்றதன் மூலமாகவும் சிலபேருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. எல்லோருக்குமே காதல் ஓர் அனுபவம்தான்.

பலர் அதை அனுபவிக்காமல், கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். நான் அதை சரியாக உபயோகப்படுத்தியிருக்கேன் என்று கூறியுள்ளார் சிம்பு.

ரஜினியின் லிங்காவுக்கு தடை

ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம் லிங்கா. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் நடப்பதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த, மைசூர் அரண்மனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இது குறித்து மைசூர் அரண்மனை வாரியத்தின் உதவி இயக்குநர் சுப்ரமண்யா கூறியுள்ளதாவது,
 
லிங்கா திரைப்படத்தின் இயக்குநர், ஒரு மாதத்துக்கு முன் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார்.

ஆனால், அரண்மனையின் பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சினைகளை கருத்திற்கொண்டு படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்து விட்டோம்.
கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த மயூரா திரைப்படத்தின் படப்பிடிப்பு, அரண்மனைக்குள் நடத்தப்பட்டது.

அதன்பின், வேறு எந்த திரைப்படத்துக்கும் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
 
இதனையடுத்து, லிங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பை மைசூரில் உள்ள, லலிதா மஹால் பேலஸ் என்ற ஹோட்டலில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நீ எங்கே என் அன்பே

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப விற்பன்னராக வேலை பார்க்கும் யுவதி நயன்தாராவின் காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே, இந்தியாவின் ஹைதராபாத்தில் தங்கி நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார்.

ஒருநாள், திடீரென காணாமல் போகும் அவரைத் தேடி ஹைதராபாத் வரும் நயன்தாரா, கணவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்கிறார். கணவர் தங்கிய விடுதியிலேயே தங்கி, ஹைதராபாத் பொலிஸில் பணிபுரியும் தமிழரான வைபவின் உதவியுடன் காணாமல் போன கணவனைத் தேடுகிறார்.

இந்நிலையில் விசேட பொலிஸ் அதிகாரி பசுபதி, நயன் வருவதற்கு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம் நயனின் காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே தான் என்று கூறுவதோடு நயனின் கணவர், நயன் நம்புவது போல் இந்து அல்ல ஓர் இஸ்லாமிய இளைஞர் என்ற குண்டையும் தூக்கிக் போடுகிறார்.
 
அதை ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் நயன், ஒரு கட்டத்தில் உண்மையை உணர்ந்து பொலிஸாருக்கு முன்பே தன் காதல் கணவரைக் கண்டுபிடித்து, அவரை கண்டிப்பதும் தண்டிப்பதும் தான் நீ எங்கே என் அன்பே திரைப்படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கதை, களம் எல்லாம்!

பூ ஒன்று புயலானது... என்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து, க்ளைமாக்ஸில் தன்னையும் நாட்டையும் நம்ப வைத்து ஏமாற்றிய காதல் கணவனை போட்டுத்தள்ளும் காட்சிகளில் வெளுத்து கட்டி இருக்கிறார் நயன்தாரா.
கோபம் வந்தாலே மயங்கி விழுந்து விடும் கதாபாத்திரமான நயன், இத்திரைப்படத்தின் பாத்திரங்களில் ஒன்றாக படம் முழுக்க பவனி வரும் அம்மனின் அவதாரமாக தன்னை கருதிக்கொண்டு, இறுதியில் பத்திரகாளியாக பளிச்சிடுவதன் மூலம் நீ எங்கே என் அன்பே திரைப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல!
 
கணவனைத் தேடி ஹைதராபாத் வருவதாகட்டும், எதிராளியின் துப்பாக்கி முனையில் நிற்பதிலாகட்டும், பொலிஸ்காரர்களிடம் வாக்குவாதப்படுவதிலாகட்டும், ஆதரவற்ற விடுதி சிறுவனிடம் காட்டும் அன்பிலாகட்டும், தன்னிடம் பரிவுகாட்டும் பொலிஸ் அதிகாரி மீது காட்டும் பாசத்திலாகட்டும் அனைத்திலுமே நம்மை கதிரையோடு சேர்த்து கட்டிப் போட்டுவிடும் நயனின் நடிப்பு வாவ் சொல்லவைத்து விடுகிறது!

நயன் மீதான வைபவ் ரெட்டியின் ஒருதலைக்காதல் அல்லது ஒருவித பரிவு, விசேட பொலிஸ் அதிகாரியாகத் தோன்றும் பசுபதியின் முரட்டுத்தனம், நயன்தாராவையும் படம் பார்க்கும் நம்மையும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஹர்ஷவர்த்த ரானேவின் நடிப்பு எல்லாம் பக்காவாக இருக்கிறது... பலே, பலே!

மரகதமணியின் மிரட்டும் இசை, விஜய் சி.குமாரின் மிளிரும் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பொயிண்ட்டுகளுடன், ஒற்றைப் பெண்ணால் இத்தனையும் முடியுமா? எனும் கேள்வி எழுந்தாலும் எண்டமூரி வீரேந்திரநாத்தின் எழுத்திலும், சேகர் கம்முலாவின் இயக்கத்திலும், நீ எங்கே என் அன்பே - நயன் ரசிகர்களுக்கு அபாரம், ஆச்சரியம்!

மீண்டும் மாதவன்

இயக்குநர் மணிரத்னத்தின் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமான மாதவன், அதன்பின்னர் என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தார்.
 
பின்னர், இரசிகர்கள் மத்தியில் சொக்லேட் போயாகவே வலம் வந்தார். ஆனால் லிங்குசாமியின் ரன் திரைப்படத்திற்கு பிறகு அக்ஷன் ஹீரோவாகவும் மாறிவிட்டார்.
அதையடுத்து, கமலுடன் நடித்த அன்பே சிவம் திரைப்படத்திற்கு பிறகு நல்லதொரு குணச்சித்திர நடிகராகவும் கொலிவூட்டில் இடம்பிடித்தார் மாதவன்.

அதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்த மாதவன், லிங்குசாமியின் வேட்டை திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

ஹிந்தி, ஆங்கில திரைப்படங்கள் என்று கவனத்தை திருப்பி விட்டார். அதற்கு காரணம், அவர் எதிர்பார்க்கும் வேடங்கள் கிடைக்காததுதானாம். வழக்கமான கதைகளே வருகிறது என்று சொல்லிக்கொண்டு வடக்கு நோக்கி பறந்து விட்டார்.

அப்படி சென்றவரை இப்போது ஸ்ரீகாந்த் நடித்த துரோகி திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் சுதா, மீண்டும் தமிழுக்கு அழைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பொக்சிங் வீரராக நடிக்கிறாராம் மாதவன்.

தற்போது அவர் நடித்துள்ள நைட் ஒப் த லிவ்விங் டெத் என்ற திரைப்படத்துக்காக ஏற்கனவே உடலை ஸ்லிம் பண்ணி கம்பீரமாக்கியுள்ள மாதவன், அந்த உடற்கட்டோடு அப்படியே தமிழ்த் திரைப்படத்திலும் நடிக்கிறாராம்.

ஆக, முதலில் பொலிவுட் நடிகராக கொலிவுட்டுக்கு வந்தவர், இப்போது ஹொலிவுட் நடிகராகி மீண்டும் கொலிவுட்டுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் மாதவன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X