2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புலி படபிடிப்பில் பொலிஸார் சோதனை

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடிக்கும் புலி திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில் பொலிஸார் சோதனையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை பொலிஸார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகில் உள்ள 'தலைக்கோணை' நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக நடிகர் விஜய் நடிக்கும் 'புலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய்யுடன், நடிகை சுருதிஹாசன், பிரபு மற்றும் துணை நடிகர், நடிகைகள் உட்பட சுமார் 300 பேர் அந்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 1 கோடி இந்திய ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

பொலிஸாரின் தாக்குதலில் தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள் இந்த தலைக்கோணம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என ஆந்திர பொலிஸார் கருதினர். இதையொட்டி அந்த பகுதியில் பொலிஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்காக நெரபைலு என்ற இடத்தில் புதிதாக ஒரு சோதனைச்சாவடியை அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். 

இந்த வழியாகத் தான் புலி சினிமா யூனிட்டை சேர்ந்த வாகனங்களும் சென்றுவரும். முன்னர் சினிமா யூனிட் வாகனங்களை பொலிஸார் சோதனையிட மாட்டார்கள். ஆனால் இந்த சம்பவத்துக்கு பின்னர் கடந்த 3 நாட்களாக சினிமா யூனிட்டின் வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலும் பொலிஸார் சோதனை நடத்தினர். ஆயுதம் தாங்கிய 30 பொலிஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸ் சோதனைக்கு இடையே பரபரப்பான நிலையிலேயே சினிமா படப்பிடிப்பு நடந்தது.

தமிழ் சினிமா படப்பிடிப்பு என்பதால், தமிழ் மொழி மட்டுமே தெரிந்த செம்மர கடத்தல்காரர்கள் இவர்களுடன் கலந்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் படப்பிடிப்பு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

(இந்திய ஊடகங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X